மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரம் அரசின் செயல்பாட்டில் நேர்மை இல்லை * கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரம் அரசின் செயல்பாட்டில் நேர்மை இல்லை * கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 23, 2024 09:37 PM
திருநெல்வேலி:மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசின் செயல்பாட்டில் நேர்மை, சமூகநீதி இல்லை என நெல்லையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
நெல்லையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது:
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போலீஸ் அத்துமீறலால் ஆற்றில் மூழ்கி பலியான 25வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தினோம். 25 ஆண்டுகளுக்கு முன்பு மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் நிலை மோசமாக இருந்தது. அவர்களின் குடியிருப்புகள் சீரற்ற நிலையில் இருந்தன. தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டன.
நாங்கள் மேற்கொண்ட தொடர் போராட்டத்தால் மாஞ்சோலை மட்டுமின்றி இதர தேயிலைத் தோட்டங்களிலும் பணியாற்றும் 15 லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற சதி நடக்கிறது. தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக அரசின் செயல்பாடு உள்ளது.
தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பறிக்க விடமாட்டோம்.
இந்த விவகாரத்தில் நான் கோர்ட்டில்
தொடர்ந்த வழக்கு வரும் 30ம் தேதி விசாரணைக்கு வருகிறது. தொழிலாளர்கள் மீது அக்கறை இன்றி துணை இயக்குனர் அந்தஸ்து அதிகாரி மூலம் கோர்ட்டில் அரசு அறிக்கை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாட்டில் நேர்மை, சமூகநீதி இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதமாக அரசின் செயல்பாடு உள்ளது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலங்களைப் பகிர்ந்து அளிக்க வேண்டும். சுற்றுலா செல்பவர்கள் மாஞ்சோலையை தவிர்க்க வேண்டும். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க அனைத்து அமைப்புகளுடன் ஆலோசித்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

