ADDED : ஏப் 26, 2024 01:11 AM
சென்னை:பிரியங்கா என்ற மகராசிக்கு பிரதமராகும் முகராசி இருப்பதாக கூறும் நடிகர் மன்சூர் அலிகான், மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை, மன்சூரலிகான் நடத்தி வருகிறார். லோக்சபா தேர்தலில், பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராக, வேலுாரில் போட்டியிட்டார்.
முடிவு தெரிவதற்குள், காங்கிரஸ் கட்சியில் இணைவதற்காக, நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து விண்ணப்பம் செய்துள்ளார்.
பின், அவர் கூறியதாவது:
காங்கிரசில் இணைவதற்கு நவம்பர் மாதத்தில் கடிதம் கொடுத்திருந்தேன். முதலில், காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன்; மீண்டும் தாய் கட்சியில் இணைய உள்ளேன். என் தலைமையில் இயங்கும் கட்சியையும், காங்கிரசில் இணைக்க உள்ளேன்.
லோக்சபா தேர்தலில், என் கைப்பணத்தை செலவு செய்துள்ளேன். சோனியா மகள் பிரியங்கா என்ற மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது.
அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், ராகுல் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது.
பத்தாண்டு காலமாக நாட்டை ஆண்ட பிரதமர் மோடி, ஒரு வெங்காயத்தை கூட உரித்து போடவில்லை. அவர் பேசுவதெல்லாம் தோல்வி பயத்தை தான் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

