இளையராஜா சாதனை மணிமகுடமெனத் திகழணும்; முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இளையராஜா சாதனை மணிமகுடமெனத் திகழணும்; முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
ADDED : மார் 02, 2025 12:25 PM

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், மார்ச் 8ல் நடக்கும் அவரது சிம்பொனி அரங்கேற்றத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மார்ச் 8ம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ள நிலையில், சென்னையில் இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுதை கழித்தேன். ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8ம் தேதி லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா. தமிழகத்தின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.