மெட்ரோ ரயில் திட்டம் விவகாரம் நிர்மலாவுக்கு தங்கம் தென்னரசு பதில்
மெட்ரோ ரயில் திட்டம் விவகாரம் நிர்மலாவுக்கு தங்கம் தென்னரசு பதில்
ADDED : செப் 14, 2024 02:41 AM
சென்னை:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 'சென்னை மெட்ரோ ரயில் திட்டம் -2க்கு, மத்திய அரசின் பங்களிப்பான 7425 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
'சென்னை மெட்ரோ ரயில் -2 திட்டத்திற்கு, 21,000 கோடி ரூபாய் கடனுதவியை, மத்திய அரசு பெற்று தந்தது. அதில், 5880 கோடி ரூபாயை மட்டுமே, தமிழக அரசு செலவு செய்துள்ளது. இத்திட்டம் மாநில அரசு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது' என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை, மத்திய அரசு திட்டமாக செயல்படுத்த, 2017 ஏப்ரலில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மத்திய அரசு காலதாமதம் செய்ததால், கடனுவி பெற வேண்டி, தமிழக அரசே திட்டத்தை செயல்படுத்த துவங்கியது. இதை மத்திய அரசும் ஏற்றது.
இத்திட்டத்தை மத்திய அரசு திட்டமாக செயல்படுத்த, 2021 ஆகஸ்ட், 17ல் நடந்த, பொது முதலீட்டு குழு, மத்திய அமைச்சரவைக்கு முன்மொழிந்தது. அதன்படி சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை, மத்திய அரசு திட்டமாக அங்கீகரித்து, மத்திய அரசின் பங்கான, 7,425 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்.
இதுவரை இத்திட்டத்திற்காக, 18,564 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தன் சொந்த நிதியில் இருந்து 11,762 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன் வழியே, 6802 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளது.