தொழிலாளர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் அமைச்சர் கணேசன் தகவல்
தொழிலாளர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் அமைச்சர் கணேசன் தகவல்
ADDED : மார் 07, 2025 12:28 AM
சென்னை:''தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் கீழ், கடந்த மூன்று மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படாத நிலையில், அனைவருக்கும் விரைவில் நிலுவை தொகையுடன், ஓய்வூதியம் வழங்கப்படும்,'' என, அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தின், ஒன்பதாவது வாரிய கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. அமைச்சர் கணேசன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், வாரிய உறுப்பினர் சுப்பிரமணிய பிள்ளை பேசுகையில், ''தமிழகத்தில், 20 தொழிலாளர் நல வாரியங்கள் சார்பில், 60 வயதை கடந்த, பதிவு செய்த தொழிலாளர்களுக்கு, மாதம் 1,200 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
''இதை 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளி மறைந்து விட்டால், அவரின் குடும்பத்திற்கு மாதம் 3,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்றார்.
கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசுகையில், ''உடலுழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம் உள்ளிட்ட 18 வாரியத்தில் பதிவு செய்த 60 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் முதல் மூன்று மாதங்களாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
''அதை வழங்க மாவட்டங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட மூன்று மாதங்களுக்கும் சேர்த்து, விரைவில் ஓய்வூதியம் வழங்கப்படும்,'' என்றார்.