மீனவர்களிடம் சமரச பேச்சு தோல்வி; அமைச்சர், எம்.எல்.ஏ., அப்செட்
மீனவர்களிடம் சமரச பேச்சு தோல்வி; அமைச்சர், எம்.எல்.ஏ., அப்செட்
ADDED : மார் 04, 2025 03:17 AM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நடத்திய சமரச பேச்சு தோல்வி அடைந்தது. இதனால் அமைச்சர், எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா ஆகியோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி தங்கச்சிமடத்தில் 4ம் நாளாக நேற்று மீனவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி நேற்று மாலை 6:30 மணிக்கு மீன்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ, காதர்பாட்சா ஆகியோர் மீனவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர்.
இதில் மீனவர்கள், இலங்கை வசமுள்ள 87 படகிற்கு நிவாரண தொகையை உயர்த்தி தர வேண்டும். இலங்கை நீதிமன்றம் விதித்த அபராத தொகையை செலுத்தி மீனவர்களை விடுவிக்க வேண்டும். சிறையில் உள்ள மீனவர்கள் குடும்பத்திற்கு வழங்கும் நிவாரணம் (ஒரு நாளைக்கு ரூ. 350) தாமதமாகவே தரப்படுகிறது. உடனடியாக வழங்க வேண்டும். விடுதலையான மீனவர்கள் சென்னையில் இருந்து அழைத்துவரும் வேன் வாடகையை மீன்துறை அதிகாரிகள் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர் என அமைச்சரிடம் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு அமைச்சர், படகிற்கு கூடுதல் நிவாரணம் குறித்து விரைவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். அபராத தொகை செலுத்துதல், படகுகளை விடுவிப்பது மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். சிறைக்கால நிவாரணம், வேன் வாடகை உடனே செலுத்த அதிகாரியிடம் வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார்.
இருப்பினும் அமைச்சரின் சமரசத்திற்கு உடன்படாத மீனவர்கள் போராட்டம் தொடரும் எனவும், இன்று (மார்ச் 4) தீக்குளிப்பு போராட்டம் நடக்கும் என ஆவேசமாக தெரிவித்தனர். இதனால் அப்செட்டான அமைச்சர், எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ் ஆகியோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.