ADDED : மார் 29, 2024 12:39 AM
சென்னை:வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுபடி அமைச்சர் பெரியசாமி ஆஜராகி, பிணையத் தொகை செலுத்தாதது குறித்து, உயர் நீதிமன்றத்தில் விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த இன்ஸ்பெக்டர் கணேசன் என்பவருக்கு, வீட்டு வசதி வாரிய நிலத்தை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக, பெரியசாமிக்கு எதிராக, 2012ல் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் இருந்து பெரியசாமியை விடுவித்து, கடந்தாண்டு சென்னையில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில், தானாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெரியசாமியை விடுவிப்பை ரத்து செய்தது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டது.
வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கணேசன், அவரது மனைவி பத்மா ஆகியோர் ஆஜராகினர்.
அமைச்சர் பெரியசாமி ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம்; ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனக்கூறி மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதிக்காத நிலையில், எப்படி விசாரணையை தள்ளிவைக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, அமைச்சர் பெரியசாமி தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.
மேலும், பெரியசாமி பிணையத்தொகை செலுத்தாதது குறித்து, உயர் நீதிமன்றத்தில் விளக்கம் பெற்று தெரிவிக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, ஏப்.,8க்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

