மக்கள் மனநிலையை அறிந்து தேர்தல் புறக்கணிப்பு முடிவு: அ.தி.மு.க., குறித்து அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
மக்கள் மனநிலையை அறிந்து தேர்தல் புறக்கணிப்பு முடிவு: அ.தி.மு.க., குறித்து அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
ADDED : ஜூன் 19, 2024 01:27 AM
விக்கிரவாண்டி : அ.தி.மு.க.,வில் பழனிசாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகே அக்கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
விக்கிரவாண்டியில் தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்குபின் 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க.,வில் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற பிறகே கட்சியில் நிர்வாகிகளிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மக்கள் தி.மு.க.,விற்குதான் ஓட்டளிப்பார்கள் என கருதியே இடைத்தேர்தலில் இருந்து பின் வாங்கியுள்ளனர். மக்கள் மனநிலையை நன்கு அறிந்திருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அனைத்து சமுதாயத்தினருக்கும் தி.மு.க., அரணாக உள்ளது. ஜாதி, மத ரீதியான பிரிவினைகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை லோக்சபா தேர்தலில் மக்கள் காட்டியுள்ளனர். அது விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பிரதி பலிக்கும். தி.மு.க., வேட்பாளர் சிவா ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறையில் ஒருவரை கூட பணியில் அமர்த்தவில்லை. தி.மு.க., ஆட்சியில் அவுட் சோர்சிங் முறையில் கண்டக்டர், டிரைவர்கள் என 685 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். காலி பணியிடங்கள் நிரப்பும் பணி சட்டசபை கூட்டத் தொடருக்கு பின் நடைபெறும். நிரந்தர பணியாளர்கள் நியமித்த பின் தற்காலிக பணியாளர்கள் நீக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

