நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவு அமைச்சர் தியாகராஜன் ஆதங்கம்
நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவு அமைச்சர் தியாகராஜன் ஆதங்கம்
ADDED : ஜூன் 30, 2024 01:00 AM
சென்னை:''கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை விட, தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறைக்கு குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
துணை சபாநாயகர் பிச்சாண்டி: கீழ்பென்னாத்துார் தொகுதி, கடம்பை கிராமத்தில், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும்.
அமைச்சர் தியாகராஜன்: தற்போது சோளிங்கநல்லுார் மற்றும் ஓசூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உள்ளது. கீழ்பென்னாத்துாரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க, எந்த திட்டமும் இல்லை.
வேலை வாய்ப்புகளை தகவல் தொழில்நுட்பத் துறை உருவாக்குகிறது. நிதி ஒதுக்கீடுக்கு ஏற்பவே பணி செய்ய முடியும்.
எம்.எல்.ஏ.,க்கள் 30 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிதியாண்டில், தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு, 119 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், மிகவும் குறைவு. இந்த நிதியில் ஓரளவுக்குதான் எங்களால் செயல்படுத்த முடியும்.
இந்தாண்டு பட்ஜெட்டில், நம் மாநிலத்தின் மொத்த செலவு 4.59 லட்சம் கோடி ரூபாய். கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களின் செலவு இதை விட குறைவு.
ஆனாலும், கர்நாடகா தகவல் தொழில்நுட்ப துறைக்கு 750 கோடி ரூபாய்; தெலுங்கானாவில் 276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைந்த நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு காரணம் மனிதவளம்.
அமைச்சர் துரைமுருகன்: இப்போது தெரிகிறதா தியாகராஜனுக்கு, உங்களிடம் நிதி கேட்க, நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்.
அமைச்சர் தியாகராஜன்: நான் நிதி அமைச்சராக இருந்த போதும், இதே அளவு நிதி தான் ஒதுக்கப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் துறைக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
மென்பொருள் ஏற்றுமதியில், இந்திய அளவில் நம் மாநிலம் முதலிடத்தில் இல்லை. ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்தோம். செயல்முறையை மாற்றினால் தான், விளைவை மாற்ற முடியும்.
முதல்வரின் ஆதரவு இருந்தால், எதை வேண்டுமானாலும் செய்யலாம். நிதி அமைச்சராக இருந்த போது, 20 ஆண்டுகளில் செய்யாத மாற்றத்தை, இரண்டு ஆண்டுகளில் செய்தேன். இன்னும் ஓராண்டு இருந்தால், தகவல் தொழில்நுட்ப துறையை மாற்றி, சிறப்பாக கொண்டு வருவேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

