தமிழ்நாடு பெயரை மாற்ற முயற்சி அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு
தமிழ்நாடு பெயரை மாற்ற முயற்சி அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு
ADDED : ஆக 26, 2024 04:11 AM
சென்னை: ''தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற ஒரு கும்பல் முயற்சிக்கிறது. தி.மு.க., இருக்கும் வரை அது நடக்காது,'' என, அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
தி.மு.க., பொறியாளர் அணி சார்பில், சென்னையில் நடந்த கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவில், அவர் பேசியதாவது:
அண்ணாதுரை தமிழுக்கு புதிய வார்த்தைகளை தந்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். அந்த பெயரை மாற்ற ஒரு கும்பல் முயற்சிக்கிறது. தி.மு.க., இருக்கும் வரை அது நடக்காது. கருணாநிதியை அரசியலில் மட்டுமல்ல, மேடை பேச்சிலும் அவரை வெல்ல யாரும் இல்லை.
ராம்விலாஸ் பாஸ்வான், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த போது, தமிழகத்தில் ரயில் திட்ட துவக்க விழா நடந்தது. விழாவில், பாஸ்வான் பேசுகையில், 'திட்டத்திற்கு மூன்றில் ஒரு பங்கு நிதியை மத்திய அரசு வழங்கும். தமிழக அரசு மூன்றில் இரண்டு பங்கு நிதியை வழங்க வேண்டும்' என்றார்.
அடுத்து பேசிய கருணாநிதி, 'ரயிலுக்கு தண்டவாளம் முக்கியம். அதன் இரண்டு கம்பிகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒன்றை விட ஒன்று குறைவாக இருந்தால், அதில் ரயில் செல்லாது. அதுபோலத்தான் நிதி ஒதுக்கீடும். மத்திய, மாநில அரசுகள் தலா, 50 சதவீதம் என்ற, சமமான நிதியை ஒதுக்கினால் தான், திட்டம் சிறப்பாக இருக்கும்' என்றார்.
இது, 28 ஆண்டுகளுக்கு முன் அவர் பேசியது. இன்று தமிழகத்திற்கு பொருத்தமாக உள்ளது. அதற்கு உதாரணம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம். இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக, 60,000 கோடி ரூபாய் செலவாகிறது.
மத்திய மாநில அரசுகள் தலா, 50 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும். மத்திய அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. எனினும், மாநில அரசு நிதியில், முதல்வர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு, உதயநிதி பேசினார்.

