ADDED : ஜூன் 15, 2024 02:24 AM
சென்னை:''சார் பதிவாளர் அலுவலகங்களில், வில்லங்க சான்று, சான்றிட்ட நகல் போன்றவற்றை, குறித்த காலத்திற்குள், பொது மக்களை அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும்,'' என, அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தினார்.
சென்னையில், அனைத்து பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:
நிர்ணயிக்கப்பட்ட வருவாயை அடையவும், அரசின் வருவாயை கூட்டுவதற்கும், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சார் பதிவாளர் அலுவலகங்களில், ஆவணப் பதிவுக்கு வரும் பொது மக்களுக்கு, ஆவணப்பதிவு முடிந்ததும், எவ்வித குறைபாடும் இல்லாத ஆவணங்களை, பதிவு நாள் அன்றே திரும்ப அளிக்க வேண்டும்.
சார் பதிவாளர்களால் பரிசீலனை மற்றும் இதர காரணங்களுக்காக நிலுவை வைக்கப்பட்ட ஆவணங்கள், சீராய்வு செய்யப்பட்டதில் நிலுவை ஆவணங்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பொது மக்களுக்கு வழங்கப்படும், வில்லங்க சான்று, சான்றிட்ட நகல்கள் ஆகியவற்றை, குறித்த காலத்திற்குள் வழங்க வேண்டும். துணைப் பதிவுத்துறை தலைவர்கள், நிர்வாக மாவட்டப் பதிவாளர்கள், தொடர் கண்காணிப்பு செய்து, சுணக்கம் ஏற்படாமல், சேவை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், வணிக வரித் துறை கமிஷனர் ஜகந்நாதன், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டனர்.

