ADDED : செப் 11, 2024 11:34 PM
சென்னை:'வரும் 14ம் தேதிக்குள் அனைவரும் ஆதார் விபரங்களை புதுப்பிக்க வேண்டும்; தவறினால், ஆதார் அட்டை செயல்பாட்டில் இருக்காது என்று வெளியாகும் தகவல்கள் தவறானது' என, ஆதார் சேவை மைய அதிகாரிகள் கூறினர்.
வங்கி கணக்கு துவங்குதல், கேஸ் சிலிண்டர் இணைப்பு, பரிவர்த்தனை என பலவற்றுக்கும் ஆதார் அவசியம்.
இந்நிலையில், 'செப்., 14க்குள் அனைவரும் ஆதார் விபரங்களை புதுப்பிக்க வேண்டும்; தவறினால் ஆதார் அட்டை செயல்பாட்டில் இருக்காது' என, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால், நாட்டில் உள்ள மக்கள் பலரும், அருகில் உள்ள ஆதார் சேவை மையங்களில் குவிந்து வருகின்றனர்.
இதுகுறித்து, ஆதார் உதவி மைய அதிகாரிகள் கூறியதாவது:
ஆதார் புதுப்பித்தல் விதிமுறைகளின்படி, ஒவ்வொருவரும் ஆதார் பதிவு செய்த, 10 ஆண்டுகளில், முகவரி உள்ளிட்ட அடையாள சான்றுகளை புதுப்பிக்க வேண்டும். இவற்றை வரும், 14ம் தேதி வரை இலவசமாக ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம்.
புதுப்பிக்க தவறினாலும், ஆதார் அட்டை செயல்படும். புதிய ஆதார் பதிவை இலவசமாக செய்து கொள்ளலாம்.
முகவரி மாற்றுவது, புகைப்படம் மாற்றுவது உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணம் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

