ADDED : மார் 03, 2025 06:23 AM

சென்னை : 'குமரிக்கடல் முதல் மாலத்தீவு வரை காணப்படும், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
அடுத்தபடியாக, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், 10; தங்கச்சிமடம், 9; திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, 8; நாலுமுக்கு, காக்காச்சி தலா, 7; மாஞ்சோலை, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் தலா, 6; திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு அணை, ராதாபுரம், பாபநாசம், தென்காசி மாவட்டம் ராமநதி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டிய, மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் முதல் மாலத்தீவு வரையிலான பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடமாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று வறண்ட வானிலையே காணப்படும்.
மார்ச், 8 வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பரவலாக வறண்ட வானிலையே காணப்படும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை அடுத்த நான்கு நாட்களுக்கு, இயல்பைவிட, 2 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஒரளவு மேகமூட்டமாக காணப்படும், காலையில் லேசான பனிமூட்டம் நிலவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.