ADDED : ஜூலை 16, 2024 11:16 PM
சென்னை, : சென்னை, கோவை, மதுரை, திருச்சி நகரங்களில் ஒலி மாசு கண்காணிப்புக்காக, நவீன 'ஸ்கேனர்'கள் அமைக்க உள்ளதாக, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ள வரம்புகள் அடிப்படையில், 50 முதல் 55 டெசிபல் வரையிலான ஒலி அளவே பாதுகாப்பானது. 85 டெசிபலுக்கு மேலான ஒலி, மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், ஒலி மாசு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு மட்டுமே பிரதானமாக கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில், பிற நடவடிக்கைகளால் ஏற்படும் ஒலிமாசைக் கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அறிவுறுத்தல் அடிப்படையில், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒலி மாசைக் கண்காணிக்க, சென்னை, கோவை, மதுரை, திருச்சி நகரங்களில், நவீன ஸ்கேனர் கருவிகள் நிறுவப்பட உள்ளன.
குடியிருப்பு, போக்குவரத்து சந்திப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில், ஸ்கேனர்கள் நிறுவப்படும். இதில் திரட்டப்படும் விபரங்கள் அடிப்படையில், ஒவ்வொரு பகுதிக்கான ஒலி மாசு வரைபடமும் தயாரிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
இதற்கான பணிகளை, 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

