ADDED : ஆக 17, 2024 12:23 AM

தமிழகத்திலும் குரங்கு அம்மை பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, அனைத்து மாவட்டங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் குரங்கு அம்மை தொற்றுநோய் பாதிப்பு இதுவரை இல்லை. இந்நோயை, பி.சி.ஆர்., பரிசோதனை வாயிலாக பரிசோதித்து உறுதிப்படுத்த முடியும். பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். தடுப்பூசி வாயிலாகவும் தற்காத்துக் கொள்ள முடியும்.
கடந்த 21 நாட்களுக்குள், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்து திரும்பிய எந்த வயதினராக இருந்தாலும், மேற்கூறிய அறிகுறி இருந்தால், அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
மாவட்ட சுகாதார அலுவலர்கள், அவர்களை கண்டறிந்து, தங்களது பகுதியில் அறிகுறியுடன் யாரேனும் இருக்கின்றனரா என உறுதி செய்ய வேண்டும்.
மிகவும் அபாயகரமான தொற்று என்பதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அறிகுறியுடன் வருவோருக்கு பரிசோதனை செய்து, பொது சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். பாதிப்பு இருக்கும் நாடுகளில் இருந்து வருபவர்களை, விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன், விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

