அந்தமானில் துவங்கியது பருவமழை 4 மாவட்டங்களுக்கு, 'ரெட் அலெர்ட்'
அந்தமானில் துவங்கியது பருவமழை 4 மாவட்டங்களுக்கு, 'ரெட் அலெர்ட்'
ADDED : மே 20, 2024 01:31 AM
சென்னை: தென்மேற்கு பருவமழை அந்தமானில் நேற்று துவங்கியது. இதையொட்டி, நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' விடப்பட்டுஉள்ளது. வரும் 23ம் தேதி வரை, பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை நேற்று அந்தமானில் துவங்கியது. நிகோபார், மாலத்தீவு, குமரிக்கடல், தெற்கு வங்கக்கடல் உள்ளிட்ட இடங்களில், பருவமழை துவங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி
இதைத் தொடர்ந்து, தென்மேற்கு வங்கக் கடலில் நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இது, வடகிழக்கில் நகர்ந்து, மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. பின்னர் இது புயலாக வலுப்பெற்று, ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநில அளவில், 70க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமாத்துாரில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது.
பேச்சிப்பாறை 10; வடபுதுப்பட்டு, ஆம்பூர் 9; கோழிப்போர் விளை 8; திற்பரப்பு, பாம்பார் அணை, நாட்றாம்பள்ளி, சிற்றாறு 7; தக்கலை, முள்ளங்கினா விளை, களியல், ஏலகிரி மலை, வால்பாறையில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
குழித்துறை, வாணியம்பாடி, கோயம்புத்துார், குளச்சல் 5; கடம்பூர், மக்கினம்பட்டி, வரட்டுப்பள்ளம், குடியாத்தம், இளையான்குடி, ஊட்டி, பெருஞ்சாணி அணை, திருமூர்த்தி அணை, பாபநாசம், பரமக்குடி, கருப்பா நதி அணையில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
திருமங்கலம், சூலுார், திருச்சி, பொன்மலை, மாஞ்சோலை, நாகர்கோவில், சின்னக்கல்லார், ராமநாதபுரம் மண்டபம், கோவில்பட்டி, கயத்தார், தர்மபுரி, ஆய்க்குடியில் 3 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
20 செ.மீ., மழை
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 23ம் தேதி வரை பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில், இன்றும், நாளையும்அதி கனமழை பெய்யும்.
இந்த மாவட்டங்களுக்கு, 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்வதற்கான, 'ரெட் அலெர்ட்' விடப்பட்டுள்ளது. விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும்.
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும்.
இதேபோல், வரும் 22, 23ம் தேதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் அதி கனமழையும், ஏழு மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரளா, லட்சத்தீவு, மாலத்தீவு கடல் பகுதிகளில், மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இன்று முதல் 23ம் தேதி வரை, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

