அரசுக்கு நெல் வழங்கிய விவசாயிகளில் 1 லட்சம் பேருக்கு 5 ஏக்கருக்கு மேல் நிலம்
அரசுக்கு நெல் வழங்கிய விவசாயிகளில் 1 லட்சம் பேருக்கு 5 ஏக்கருக்கு மேல் நிலம்
ADDED : மார் 01, 2025 01:43 AM
சென்னை: தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், நடப்பு சீசனில் இதுவரை, 2.85 லட்சம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ததில், ஒரு லட்சம் பேர், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
மத்திய அரசு சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது.
இந்த நெல், ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.
கடந்த, 2024 செப்., 1ல் துவங்கிய நடப்பு நெல் கொள்முதல் சீசன், இந்தாண்டு ஆகஸ்டில் முடிவடைகிறது.
நெல் வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு சார்பில், 100 கிலோ எடையுள்ள குவிண்டால் நெல்லுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது.
நடப்பு சீசனில் நேற்று வரை, 2,878 நேரடி கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, 2.85 லட்சம் விவசாயிகளிடம் இருந்து, 21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுஉள்ளது.
அதில், 94,107 பேர் ஒரு ெஹக்டேர் அதாவது, 2.45 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, 2.45 ஏக்கர் முதல், 5 ஏக்கர் வரை, 70,702 விவசாயிகளும்; 5 ஏக்கர் முதல், 10 ஏக்கர் வரை, 61,710 விவசாயிகளும்; 10 ஏக்கர் முதல், 24.50 ஏக்கர் வரை, 45,989 விவசாயிகளும் நிலம் வைத்துள்ளனர். மேலும், 24.50 ஏக்கருக்கு மேல், 12,998 பேர் நிலம் வைத்துள்ளனர்.
இதன் வாயிலாக, 1.20 லட்சம் விவசாயிகள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளனர்.
இந்த விபரம், மத்திய உணவு மற்றும் பொது வினியோக திட்ட இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.