ADDED : ஜூன் 27, 2024 02:35 AM
சென்னை:ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல், மாநில அரசின் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலின் அடமானம் வைப்பதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
'ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே தான் அதிகாரம் உள்ளது' என்று, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சமூக நீதியை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களால் மட்டும் தான் இப்படி அப்பட்டமாக பொய் கூற முடியும்.
முதல்வரின் இந்த நிலைப்பாடு, தமிழகத்தில் சமூக நீதியை பாதுகாக்க முடியாத நிலையை உருவாக்கி விடும். எனவே இந்த நிலைப்பாட்டை முதல்வர் மாற்றிக் கொள்ள வேண்டும். மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தாமல், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பது, மாநில அரசின் அதிகாரத்தை அடகு வைக்கும் செயல்.
பீஹார், கர்நாடகா, ஒடிஷா, ஆந்திராவில் மாநில அரசுகளால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இவற்றை அறியாமல், யாரோ கொடுத்த தவறான தகவல்களின் அடிப்படையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று, முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கக் கூடாது. இதற்காக, அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.