சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்ற தாய் மனு: இரண்டு வாரங்களில் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்ற தாய் மனு: இரண்டு வாரங்களில் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : மே 10, 2024 06:04 AM

சென்னை : கோவை சிறையில் உள்ள, 'யு டியூபர்' சங்கரை, வேறு சிறைக்கு மாற்றக்கோரிய அவரது தாயின் விண்ணப்பத்தை, இரண்டு வாரங்களில் பரிசீலித்து உத்தரவிடும்படி, சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பெண் போலீசார் பற்றி தரக்குறைவாக, அவதுாறாக பேட்டி அளித்ததால், யு டியூபர் சங்கரை பேட்டி எடுத்த, 'ரெட் பிக்ஸ்' யு டியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டுக்கு எதிராக, கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த சங்கரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறையில் சங்கரை துன்புறுத்துவதாகவும், உரிய சிகிச்சை வழங்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில், அவரது தாய் கமலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இம்மனு, நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கலைமதி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. கோவை சிறையில் சங்கரை சந்தித்த வழக்கறிஞர்கள் குழு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் அளித்த அறிக்கை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவரை, வேறு சிறைக்கு மாற்ற, சிறைத்துறைக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அதை பரிசீலிக்கும்படி உத்தரவிடவேண்டும்,” என்றார்.
இதையடுத்து, ஏற்கனவே மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதால், ஆட்கொணர்வு வழக்கை, நீதிபதிகள் முடித்து வைத்தனர். சிறை மாற்றம் கோரிய சங்கரின் தாய் அளித்த விண்ணப்பத்தை, இரண்டு வாரங்களில் சிறைத்துறை பரிசீலித்து ஆணை பிறப்பிக்கவும் உத்தரவிட்டனர்.
மேலும் 2 வழக்கில் கைது
இதற்கிடையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை, மேலும் இரண்டு வழக்குகளில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் டி.எஸ்.பி., யாஸ்மின் என்பவர் சங்கர் மீது புகார் அளித்துள்ளார். அதேபோல, சென்னையைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரும், தமிழர் முன்னேற்றப்படை நிர்வாகி வீரலட்சுமி அளித்த புகார் மீதும், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த இரண்டு வழக்குகளிலும், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கரை நேற்று கைது செய்தனர். வழக்கு விபரங்களை, கோவை சைபர் கிரைம் போலீசாரிடம், சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்தனர். இதுவரை ஐந்து வழக்குகளில் சங்கர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம், ஊட்டி புதுமந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி, பெண் போலீஸ் குறித்து அவதுாறு பேசியதாக, சவுக்கு சங்கர் மீது, ஊட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையிலான போலீசார், சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
கையில் மாவு கட்டு
கோவை மத்திய சிறையில், சவுக்கு சங்கர் மீது கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, சங்கரின் வழக்கறிஞர் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், சங்கருக்கான மருத்துவ சிகிச்சைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கோவை அரசு மருத்துவமனைக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார்.
சிகிச்சைக்கு பின், எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படும் வலது கையில் மாவு கட்டுடன் சங்கரை, போலீசார் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.