ADDED : ஆக 30, 2024 11:00 PM
சென்னை:பல்வேறு நிதி நிறுவனங்களின் மோசடி நடந்த நிலையில், ஒரு மோசடியில் தொடர்புஉடைய அதே, 50க்கும் மேற்பட்டோர் முகவர்களாக இருந்து, மோசடியை அரங்கேற்றியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் முதலீட்டளர்களுக்கு, மாதம் தோறும், 25 - 30 சவீதம் வட்டி தருவதாக, 2.84 லட்சம் பேரிடம், 13,700 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளன. மோசடி குறித்து, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொடர் விசாரணையில், மோசடிக்கு பின்னணியில் முகவர்கள் போல, மாபியா கும்பல் செயல்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
நிதி நிறுவனங்கள், லட்சக்கணக்கான முதலீட்டாளர்களை கவர்ந்தது பற்றி விசாரித்தோம். அப்போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் வேலுார் மாவட்டத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், வெவ்வேறு நிறுவனங்களில் முகவர்களாக செயல்பட்டது தெரியவந்தது.
அவர்கள் கமிஷன் தொகைக்காக மட்டுமே முகவர்களாக செயல்படவில்லை. நிதி நிறுவன இயக்குனர்களுடன் சேர்ந்து, மோசடி செய்ய வேண்டும் என்பதற்காகவே, கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், மோசடி மாபியா கும்பல்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அவர்கள், மூன்றில் இருந்து ஆறு மாதம் மட்டுமே நிதி நிறுவனத்தில் முகவர்களாக இருப்பர். பின், அடுத்தடுத்த நிறுவனங்களுக்கு தாவி, கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டி உள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.