ADDED : மார் 07, 2025 07:21 AM

திருப்பூர் : மதுரையில் வரும் ஜூன் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடத்தப் போவதாக, ஹிந்து முன்னணி அறிவித்துள்ளது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: வரும் ஜூன் 22ல், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. ஐந்து லட்சம் பக்தர்களை பங்கேற்க வைக்க முயற்சி நடக்கிறது. தமிழகத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றுவதற்கு ஒரு கும்பல் சதி செய்ததை நாம் அறிவோம்.
இரண்டாவது படைவீடான திருச்செந்துார் கடல் அரிப்பால் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அபாயத்தை தடுக்க தமிழக அரசு உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மூன்றாம் படை வீடான பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு கூட தமிழக அரசு தடை விதித்து வருகிறது.
இதுபோல், முருகனின் அற்புத தலங்கள் பலவும் சீரழிந்து வருவது பற்றிய கவலை பக்தர்களிடம் எழுந்துள்ளது. வேற்று மத பண்டிகைகளுக்கு தமிழக அரசு வாழ்த்து சொல்லும் நிலையில் தமிழ் தெய்வம் முருகப் பெருமானின் தைப்பூசத் திருவிழாவுக்கு வாழ்த்து சொல்வதற்கு கூட, தற்போதைய தமிழக அரசுக்கும் மனமில்லை.
இத்தகைய சூழலில், நமது ஹிந்து தர்மத்தை காக்க, கோவில்களை காக்க, பண்பாட்டை காக்க, உலகெங்கிலும் உள்ள, குறிப்பாக தமிழகத்தில் உள்ள முருக பக்தர்கள் ஒருங்கிணைந்திட வேண்டிய காலகட்டத்தில் இருந்து வருகிறோம். இதற்காக, ஜூன் 22ல், முருக பக்தர்கள் மாநாட்டை நடத்திட ஹிந்து முன்னணி முடிவு செய்துள்ளது. மாநாட்டில் பங்கேற்க வீடு வீடாக சென்று முருகபக்தர்களை அழைக்கவும், மாநாட்டின் நோக்கத்தை மக்களுக்கு விளக்கிடவும், பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.