புதிய தலைமை செயலாளராக முருகானந்தம்; தமிழக அரசு நியமனம்
புதிய தலைமை செயலாளராக முருகானந்தம்; தமிழக அரசு நியமனம்
UPDATED : ஆக 19, 2024 09:55 AM
ADDED : ஆக 19, 2024 09:38 AM

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலராக, முதல்வரின் செயலராக உள்ள முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.
தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக அரசின், 49வது தலைமை செயலராக சிவ்தாஸ் மீனா, கடந்த ஆண்டு ஜூன் 30ல் பொறுப்பேற்றார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த, கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்று நன்றி உரையாற்றினார்.
சிவ்தாஸ் மீனாவுக்கு புதிய பொறுப்பு
விழா முடிந்த சில மணி நேரத்தில் அவர், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்படுவதாக அரசாணை வெளியானது. இவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இன்ஜியரிங் பட்டதாரி; 1989ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார். பல்வேறு பதவிகளை வகித்த சிவ்தாஸ் மீனாவின் பதவி காலம் வரும் அக்டோபரில் நிறைவடைய உள்ளது.
நியமனம்
இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 19) புதிய தலைமை செயலராக, முதல்வரின் செயலராக உள்ள முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.
* இவர் முதல்வரின் முதன்மை செயலராக இருந்துள்ளார். முருகானந்தம் ஐ.ஏ.எஸ்., 1991 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி.
* இவர் முதுநிலை கணினி அறிவியல் பட்டதாரி; ஐ.ஐ.எம்., லக்னோவில் எம்.பி.ஏ., படித்துள்ளார்.
* பல்வேறு துறைகளில் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் முருகானந்தத்திற்கு உள்ளது.
* பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்த போது, அவருக்கு கீழ் முகானந்தம் செயலாளராக பணியாற்றினார். இவர் கோவை மாவட்ட கலெக்டராகவும் இருந்தவர்.