ADDED : மார் 24, 2024 04:22 AM
சென்னை: டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, 'சங்கீத கலாநிதி' விருதுக்கு, கர்நாடக இசைக்கலைஞர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் அறிக்கைக்கு பின், அமைதியாகி உள்ளனர்.
கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான, 'சங்கீத கலாநிதி' விருதை அறிவித்தது.
இது, கர்நாடக இசை கலைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்கள், தங்களின் சமூக வலைதளங்களில் அகாடமி மற்றும் விருதின் மாண்பு, ஏற்கனவே விருது பெற்றவர்களின் குரு - சிஷ்ய பரம்பரை, பக்தி நெறி மாறாத பாரம்பரிய இசையை கட்டிக்காத்த மாண்பு உள்ளிட்டவற்றை விளக்கினர்.
இந்த விருதை, டி.எம்.கிருஷ்ணா பெறுவதால், ஏற்கனவே விருது பெற்றோருக்கு இழுக்கு ஏற்படுவதாகவும், சாஸ்த்ரிய சங்கீத நெறியை மீறுவோரை ஊக்கப்படுத்துவதாகவும் விமர்சித்தனர். வேறு சிலர், இந்தாண்டு மியூசிக் அகாடமியில் கச்சேரி செய்வதில்லை என்றும், ஏற்கனவே பெற்ற விருதுகளை திருப்பி அளிப்பதாகவும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்நிலையில், விருதுக்கு தேர்வான டி.எம்.கிருஷ்ணாவை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, ஏற்கனவே விருது பற்றி விமர்சித்தவர்கள், தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியதுடன், அதுபற்றி பேசுவதையும் நிறுத்திவிட்டு அமைதியாகி உள்ளனர்.

