எனது வெற்றி, புதிய அரசியல் பக்கத்தை திறக்கும் 'கிளைமேக்ஸ்' பிரசாரத்தில் அண்ணாமலை உறுதி
எனது வெற்றி, புதிய அரசியல் பக்கத்தை திறக்கும் 'கிளைமேக்ஸ்' பிரசாரத்தில் அண்ணாமலை உறுதி
ADDED : ஏப் 18, 2024 01:10 AM

கோவை:''எவ்வளவு பணம் கொட்டினாலும், நீதியின் பக்கம் மக்கள் என்பதை ஜூன் 4ம் தேதி நிரூபிப்பர்,'' என்று பா.ஜ., கோவை தொகுதி வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை பேசினார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஓய்வு உறக்கமின்றி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, சிங்காநல்லுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, மசக்காளிபாளையம் பாலன் நகர் பகுதியில், பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
அடுத்து வரும், 50 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் வரலாறு எழுதும் போது, 'நரேந்திர மோடி ஆட்சிக்கு முன், நரேந்திர மோடி ஆட்சிக்கு பின்' என்று தான் எழுத முடியும். 2019 ல் பா.ஜ., கொடுத்த, 295 வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றி உள்ளது.தி.மு.க., அளித்த ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.
ஜூன் 4க்கு பின், திராவிட அரசியலை தாண்டிய புதிய அரசியல் வர உள்ளது.
'கரென்ட் ஆப்' செய்து விட்டு வீடு வீடாக, 500 ரூபாய்நோட்டுக்களை வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்கள். இதை பா.ஜ., உடைக்கும். எவ்வளவு பணம் கொட்டினாலும், நீதியின் பக்கம் கோவை மக்கள் என்பதை நிரூபிப்பார்கள்.
மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான், தி.மு.க., கோவையை பார்க்கிறது. கோவைக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. 33 மாதங்களாக முதலமைச்சர், அமைச்சர்கள் வேலை செய்யவில்லை.
லோக்சபா வேட்பாளருக்கு ஓட்டு போட்டால், வேலை செய்கிறோம் என தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருப்பது வெட்கக்கேடானது. 'இண்டியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என, இதுவரை அவர்கள் சொல்லவில்லை.
அரசு இயந்திரம் செயலிழப்பு
வயநாட்டில் ராகுலை எதிர்த்து கம்யூ., போட்டியிடுகிறது. தமிழகத்தில் கம்யூ., உடன் கூட்டணி. பக்கத்து மாநிலங்களில் கூட ஒன்றாக இல்லாத இவர்கள், எப்படி நாட்டை ஆள முடியும்? எந்த தைரியத்தில் மக்களை பார்த்து, ஓட்டு கேட்கின்றனர்? அரசியல் கட்சியை தாண்டி ஓட்டு போட வேண்டிய தேர்தல் இது.
கட்சி, மதம், சாதி எதுவும் தேவையில்லை. மோடிக்கு நிகர் மோடி மட்டுமே; அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த முடியாது.
கடந்த, ஐந்து ஆண்டுகளாக இருந்த கம்யூ., - எம்.பி., எந்த வேலையும் செய்யாமல், வளர்ச்சியை எல்லாம் தடுத்துள்ளார். 15 நாட்களுக்கு ஒருமுறை தான், கோவையில் தண்ணீர் வருகிறது. சாலைகள் எல்லாம் குழிகளாக உள்ளன.
கோவையில் முழுமையாக அரசு இயந்திரம் செயலிழந்து விட்டது. இந்த நகரத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய சூழலில் உள்ளது.
எப்படி ஓட்டுப்போட வேண்டும்
கட்சியை பார்த்து ஓட்டு போடாமல், குழந்தைகளின் எதிர்காலத்தை பார்த்து ஓட்டு போட வேண்டும்.25 ஆண்டுகளுக்கு பிறகு, கோவை இந்தியாவின் முதன்மை நகரமாக மாற வேண்டும். அதை பா.ஜ.,வால் தான் செய்ய முடியும். அண்ணாமலையை லோக்சபா எம்.பி.,யாக கொண்டு வந்தால் மாற்றம் நடக்கும். 2026ல் திராவிடம் இல்லாத ஆட்சி வர, கோவை அடித்தளமிட போகிறது.
கோவையில் நிறைய தேவைகள் உள்ளன. ரயில்வே ஸ்டேஷன் விரிவுபடுத்தப்பட வேண்டும். மிகப்பெரிய நகரங்களில் ரயில்வே ஸ்டேஷன்கள், ஆறு முதல் ஏழு அடுக்குகள் வரை உள்ளன. அந்த அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த, ரயில்வே ஸ்டேஷனாக கோவை மாற வேண்டும். அதற்கான அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துவேன்.
எங்களை கேள்வி கேளுங்கள்
நீங்கள் எங்களை கேள்வி கேட்க வேண்டும்; நான் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்; அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.
கோவை மக்கள் 'அட்வான்ஸ்' ஆக சிந்திக்கக்கூடியவர்கள். அடுத்த 25 ஆண்டுகளுக்குப்பின் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கும் மக்கள் நீங்கள். நீங்கள் நினைப்பதை மோடி ஒருவரால் மட்டுமே செயல்படுத்த முடியும்.
நாட்டின் முதன்மை நகரமாக, கோவை மாற வேண்டும். கோவையில் எனது வெற்றி, தமிழகத்தில் புதிய அரசியல் பக்கத்தை திறக்கும். எங்களைநாங்கள் உங்களுக்கு முழுமையாக அர்ப்பணித்திருக்கிறோம்.
ஜாதி, மதம், கட்சியை தாண்டி மோடியோடு நீங்கள் நிற்க வேண்டும். எதையும் எதிர்பார்க்காமல் அவர் முழுமையாக உங்களுடன் நிற்கிறார்.எந்த வேலையாக இருந்தாலும், ஒதுக்கி வைத்து விட்டு, அனைவரும் ஓட்டுப்போட வேண்டும்.தவறினால் அது சரித்திர பிழையாக மாறி விடும்.
இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.
அவருடன், எல்.ஏ., வானதி சீனிவாசன், மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி உத்தமராமசாமி பங்கேற்றனர்.

