ADDED : ஜூலை 16, 2024 02:17 AM

ராமநாதபுரம்: மலேசியாவிற்கு வேலைக்கு சென்று மூன்று மாதங்களுக்கு முன் மாயமான ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை ஊராட்சி குப்பானி வலசையைச் சேர்ந்த டிரைவர் கருணாமூர்த்தியை 36, கண்டுபிடித்து மீட்டு அழைத்து வர வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தினர்.
கருணாமூர்த்தியிடம் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த ஏஜன்ட் ஒருவர் மலேசியாவில் நல்ல வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.
அதை நம்பி ரூ.ஒரு லட்சம் கொடுத்து மார்ச் 31ல் கருணாமூர்த்தி மலேசியா சென்றார். அதன் பிறகு 3 மாதங்களாக அவரை குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து கருணாமூர்த்தி மனைவி ஜெயலட்சுமி ராமநாதபுரத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் மனு அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கணவர் கருணாமூர்த்தி மார்ச் 31ல் மலேசியா சென்றார். பின் அவர் ஒரு முகாமில் தன்னை அடைத்து வைத்திருப்பதாக அலைபேசியில் தெரிவித்தார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை மலேசியா அனுப்பிய ஏஜன்டிடம் கேட்டால் சரியாக பதில் தராமல் மிரட்டுகிறார். இரண்டு குழந்தைகளுடன் சிரமப்படுகிறேன். மலேசியாவில் மாயமான கணவரை கண்டுபிடித்து மீட்டு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என கூறியுள்ளார்.

