தேசிய கட்சிகளால் பிரயோஜனம் இல்லை: ஜெயகுமார் விரக்தி
தேசிய கட்சிகளால் பிரயோஜனம் இல்லை: ஜெயகுமார் விரக்தி
ADDED : ஏப் 28, 2024 01:37 AM
சென்னை: ''காங்கிரஸ் மற்றும் பா.ஜ., அரசுகள், தமிழகத்தை ஓர வஞ்சனையாக பார்க்கின்றன. தேசிய கட்சிகளால் தமிழகத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லை,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின்படி, சென்னையில் உட்புற பிரதான சாலைகள் அமைக்க, 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
சாலை பணிகளை, முழுமையாக ஆய்வு செய்யாமல், அண்ணா பல்கலை பேராசிரியர் சான்றிதழ் பெறப்பட்டு உள்ளதாகவும், இந்நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்த உண்மை நிலையை, எத்தனை சாலைகள் அமைக்கப்பட்டது, முறைகேடு நடந்தது உண்மையா என, மாநகராட்சி தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. தி.மு.க., ஆட்சி குறித்து, அ.தி.மு.க.,வினர் கருத்து கூறினால், இரவோடு இரவாக கைது செய்வது வாடிக்கையாக உள்ளது.
ஊடகவியலாளர்களும் கருத்து கூற முடியாத நிலை உள்ளது. ஸ்டாலின் சொல்கிறபடி காவல்துறை செயல்படுகிறது. காவல் துறையில், பொய் வழக்கு போடுவோர், அ.தி.மு.க., ஆட்சி வரும் போது பதில் கூற வேண்டும்.
மத்திய அரசிடம், 2015 முதல் பல்வேறு புயல்களுக்கு, 1.50 லட்சம் கோடி ரூபாய் கேட்டுள்ளோம். யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல, இதுவரை 7,000 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், ஆட்சியில் இருக்கும் பா.ஜ., அரசுகள், வடமாநிலங்களுக்கு வாரி கொடுத்துள்ளன. தமிழகத்திற்கு வழங்குவதில்லை; இது ஏற்க முடியாதது.
மத்தியில் கூட்டணி அரசில், தி.மு.க., இருந்த போது, இதை முறைப்படுத்தி இருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை. தமிழகத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், வட மாநிலங்களில் பிரசாரம் செய்யப் போகிறாராம். இது கேலிக்கூத்து.
தேசிய கட்சிகளால் தமிழகத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லை.
இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

