ADDED : மார் 26, 2024 08:56 PM
சென்னை:அரசு பள்ளிகளில், 'நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சியை மே, 3 வரை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, மே, 5ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே முடிந்துள்ளது.
நாடு முழுதும் இருந்து, 13.63 லட்சம் மாணவியர், 24 மாற்று பாலினத்தவர் உட்பட, 23.82 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், தமிழகத்தில் இருந்து, 1.55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 13,000 மாணவ, மாணவியரும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அரசின் சார்பில் இலவசமாக நீட் பயிற்சி அளிக்கப் படுகிறது.
மாவட்ட வாரியாக மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட உண்டு, உறைவிட பள்ளிகளில், நேற்று முன்தினம் முதல் பயிற்சி நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியை, மே, 3ம் தேதி வரை நடத்த வேண்டும். ஞாயிற்றுக்கிழமையும் பயிற்சி வகுப்பை நடத்த வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
