தமிழக விவசாய விற்பனை கூடங்களை தேசிய சந்தையில் இணைப்பதில் அலட்சியம்
தமிழக விவசாய விற்பனை கூடங்களை தேசிய சந்தையில் இணைப்பதில் அலட்சியம்
ADDED : ஜூலை 31, 2024 12:10 AM
சென்னை:தமிழகத்தில் உள்ள, 127 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை, மின்னணு தேசிய சந்தையில் இணைக்காமல் வேளாண் வணிக துறையினர் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
நாடு முழுதும் உள்ள விவசாயிகள், தங்கள் உற்பத்தி பொருட்களை எவ்வித சிரமமும் இன்றி எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்வதற்கு, மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தை, மத்திய அரசு 2017ல் துவங்கியது.
இதன் வாயிலாக, உள்ளூரில் விலைபோகாத பொருட்களை மற்ற மாநிலங்களில் விற்பனை செய்து, விவசாயிகள் லாபகரமான விலையை பெறுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்திற்காக, கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 284 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், 157 விற்பனை கூடங்கள் மட்டுமே மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இதை பயன்படுத்தி தேங்காய், பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பலவகை உற்பத்தி பொருட்களை, தமிழக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
அவ்வாறு, 2023 - 24ம் ஆண்டு 2,532 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக, 5.50 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
புதுச்சேரி, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி, தெலுங்கானா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கும், தமிழக விவசாயிகள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்து உள்ளனர்.
ஆனால், மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன், 127 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இன்னும் இணைக்கப்படாமல் உள்ளன.
இதனால், ஒழுங்குறை விற்பனை கூடங்களில் உள்ள விவசாயிகள், தங்கள் பொருட்களை லாபகரமான விலையில் விற்க முடியாமல், கமிஷன் ஏஜன்டுகளை நாடும் நிலை நீடித்து வருகிறது.
- ஆர்.விருத்தகிரி,
தேசிய செயற்குழு உறுப்பினர்,
இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு

