'காக்கா ஆழி'யை அழிப்பதில் அலட்சியம்: நீர்வளத்துறை மீது பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி
'காக்கா ஆழி'யை அழிப்பதில் அலட்சியம்: நீர்வளத்துறை மீது பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி
ADDED : ஆக 09, 2024 01:37 AM

சென்னை: 'தென் அமெரிக்க மஸ்ஸல் எனப்படும், காக்கா ஆழி வெளியிடும் துர்நாற்றம் உடைய கசடுகளால், இறால், மீன் உள்ளிட்ட கடல் உயிரிகள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது.
'இதனால், பழவேற்காடு ஏரி போன்ற உப்பங்கழிகளை நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, அவற்றை அழிக்க உத்தரவிட வேண்டும்' என, குமரேசன் சூளுரன் என்பவர், தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
செயல் திட்டம்
இதை விசாரித்த தீர்ப்பாயம், காக்கா ஆழியை அழிப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என, நீர்வளத்துறைக்கும், தமிழ்நாடு சதுப்பு நில ஆணையத்திற்கும் உத்தரவிட்டது.
தீர்ப்பாய உத்தரவின்படி நீர்வளத்துறையின் ஆரணியாறு செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கையில், 'வெளிநாட்டு சிறு உயிரினமான காக்கா ஆழி, எண்ணுார் காமராஜர் துறைமுகம் வழியாகவே பரவியுள்ளது.
'எனவே, கொசஸ்தலையாறு உப்பங்கழி, பகிங்காம் கால்வாய், பழவேற்காடு முகத்துவாரம் வரை துார்வாருதல் வாயிலாக காக்கா ஆழியை அழிக்க எண்ணுார் துறைமுகம், 160 கோடி ரூபாயை வழங்க வேண்டும்' என்று, கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
காக்கா ஆழியால் இறால், நண்டு மற்றும் மீன்கள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, காக்கா ஆழி பாதிப்பில் இருந்து, மீன்வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க, சிற்றோடைகள், உப்பங்கழி ஏரிகளை பாதுகாப்பது அவசியம்.
காக்கா ஆழியை அழிக்க தமிழக சதுப்பு நில ஆணையத்துடன் இணைந்து, 8.50 கோடி ரூபாயிலான திட்டத்தை செயல்படுத்தி வருவதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, தெரிகிறது. எண்ணுார், சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களே பொறுப்பு என, நீர்வளத்துறை கூறுகிறது. காக்கா ஆழி வேகமாக பரவி வருவதால், அதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.
இப்பிரச்னையை நீர்வளத்துறை கையாளும் முறை ஏமாற்றம் அளிக்கிறது. காக்கா ஆழியை அழிப்பதில் செய்யப்படும் தாமதம், ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்.
எனவே, தமிழக அரசு முதலில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பிறகே தவறு செய்தவர்களிடம் இருந்து, செலவுத் தொகையை வசூலிக்கலாம்.
நடவடிக்கை அறிக்கை
தமிழக சுற்றுச்சூழல், நீர்வளம், மீன்வளம் ஆகிய துறைகளின் செயலர்கள், தமிழக சதுப்பு நில ஆணைய உறுப்பினர் - செயலர், எண்ணுார், சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களின் தலைவர்கள் கூட்டத்தை, தமிழக அரசின் தலைமை் செயலர் கூட்டி, காக்கா ஆழியை அழிப்பது குறித்து, ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசு அறிக்கை அளிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 27ம் தேதி நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.