புதிதாக 80,000 ரேஷன் கார்டு வினியோகம் பொருட்கள் அடுத்த மாதம் தானா?
புதிதாக 80,000 ரேஷன் கார்டு வினியோகம் பொருட்கள் அடுத்த மாதம் தானா?
ADDED : செப் 07, 2024 12:39 AM

சென்னை: ஓராண்டுக்கு மேல் காத்திருந்த நிலையில், 80,000 பேருக்கு புதிய ரேஷன் கார்டு கிடைத்துள்ளது. ஆனால், பொருட்கள் அடுத்தமாதம் தான் வழங்க முடியும் என, பொதுமக்கள் அலைய வைக்கப்படுகின்றனர்.
தமிழக அரசு, 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பம் வழங்கி, மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகளை தேர்வு செய்தது. இதனால், 2023 ஜூலை முதல் புதிய ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் அளிப்பது, அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
கடந்த மாதம் வரை புதிய கார்டுக்கு பெறப்பட்ட, 2.89 லட்சம் விண்ணப்பங்களில், கள விசாரணை முடிந்த, 92,650 பேருக்கு கார்டு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுவரை, 80,000 பேருக்கு கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, பயனாளிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் ஒப்புதல் கிடைத்தாலும், புது ரேஷன்கார்டு தற்போது தான் அச்சிடப்பட்டு தரப்பட்டுள்ளது. ரேஷன் கடைக்கு சென்றால், 'உங்கள் கார்டுக்கு பொருட்கள் வரவில்லை; அடுத்த மாதம் வரவும்' என்கின்றனர்.
இம்மாதம் துவங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை. எனவே, தற்போது கார்டு வழங்கியவர்களுக்கு, இம்மாதம் முதல் பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரேஷன் கடைகளில் உள்ள கார்டுதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இம்மாதம் வழங்கப்பட வேண்டிய பொருட்கள், ஆகஸ்ட் இறுதியில் இருந்து கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இம்மாதம் கார்டு வழங்கியவருக்கு, அடுத்த மாதத்தில் இருந்து தான் பொருட்கள் வழங்கப்படும். இதுதான் வழக்கம்' என்றார்.