இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தம் கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தம் கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை
ADDED : டிச 14, 2024 09:22 PM
சென்னை:'தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்பதால், கடலோர மாவட்டங்களில் நாளை முதல் கன மழை துவங்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தமிழக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக, தென்காசி மாவட்டம் கடனா அணை பகுதியில், 26 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில், 23 செ.மீ., மழை; நாலுமுக்கு பகுதியில், 22 செ.மீ., மழை பெய்துஉள்ளது.
துாத்துக்குடி விமான நிலையத்தில், 21 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி பகுதியில், 19 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், அதே பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இந்த அமைப்பு வலுவடைந்து, மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி, அடுத்த இரண்டு நாட்களில் நகரக்கூடும்.
இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில், நாளை முதல் கன மழை துவங்க வாய்ப்பு உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், லேசானது முதல், மிதமான மழை பெய்ய இன்று வாய்ப்புள்ளது. வரும் 20 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
நாளை
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள்
நாகப்பட்டினம், திருவாரூர், கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் நாளை மறுநாள் மிக கன மழை பெய்யக்கூடும்; இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை மறுநாள் கன மழை பெய்யும்.
சென்னையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும். மழை எச்சரிக்கை இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.