உள்ளாட்சிகளை தரம் உயர்த்த புதிய சட்ட திருத்தம்: நேரு
உள்ளாட்சிகளை தரம் உயர்த்த புதிய சட்ட திருத்தம்: நேரு
ADDED : ஜூன் 27, 2024 11:52 PM
சென்னை,:''உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்த, புதிய சட்டத் திருத்தம் நாளை கொண்டு வரப்படும்,'' என, அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
இந்திய கம்யூனிஸ்ட் - ராமச்சந்திரன்: தளி தொகுதி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, 28 வார்டுகள் உடையது. இப்பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
அமைச்சர் நேரு: மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாளை சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வர உள்ளோம்.
ஏற்கனவே உள்ளாட்சிகளை தரம் உயர்த்த, மக்கள் தொகை எவ்வளவு இருக்க வேண்டும்; வருவாய் எவ்வளவு இருக்க வேண்டும் என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய சட்டத் திருத்தத்தில், தேவையான இடத்தில், நகராட்சியாக, மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட உள்ளது. சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்ட பின், உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
ராமச்சந்திரன்: நன்றி. தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில், மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள, பூங்கா எதுவும் இல்லை.
அப்பகுதியில், 35 ஏக்கர் பரப்பளவில், தேவராஜன் ஏரி அமைந்துள்ளது. அதைச் சுற்றி பூங்கா மற்றும் நடைபயிற்சி பாதை ஏற்படுத்தித் தர வேண்டும்.
நேரு: நீர்வளத்துறை அமைச்சர், பாசனமற்ற ஏரிகளை பராமரிக்கும் பொறுப்பை, உள்ளாட்சி அமைப்புகளிடம் தருவதாகக் கூறியுள்ளார். நீங்கள் கூறும் ஏரி பாசனமற்ற ஏரியாக இருந்தால், அனுமதி பெற்று அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அதன்பின், மானிய கோரிக்கை விவாதத்தில் நடந்த விவாதம்:
காங்கிரஸ் - ராஜேஷ்குமார்: கன்னியாகுமரி மாவட்டத்தில், 25 ஊராட்சிகளை, பேரூராட்சிகளுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைத்தால், 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படாது.
எனவே, ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைக்கக் கூடாது. மக்கள் கருத்து கேட்டு முடிவு செய்ய வேண்டும்.
நேரு: ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டியதில்லை என்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி பகுதியில், சாலை வசதி, பாதாள சாக்கடை திட்டம், அனைத்து வசதிகளையும் நிறைவேற்றும் போது, அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு அவை கிடைப்பதில்லை. அதனால், இணைக்க விரும்புகிறோம்.
பேரூராட்சிகளை தரம் உயர்த்தும்படி, 56 எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் கொடுத்துள்ளனர். சிலர் சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக, இணைக்கக் கூடாது என்கின்றனர்.
ஒவ்வொரு ஊரிலும் மாவட்ட கலெக்டர் கணக்கெடுக்கிறார். ஆட்சேபனை இருந்தால் அவரிடம் தெரிவிக்கலாம். ஆட்சேபனை இருந்தால், எங்களுக்கு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
மாநகராட்சி அருகில் உள்ள ஊராட்சிகளில், அரசின் திட்டங்களை செயல்படுத்த விரும்புகிறோம். தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.

