அபார்ட்மென்ட் வீடு வாங்குவோர் ஆவணங்களை பெற புதிய வசதி
அபார்ட்மென்ட் வீடு வாங்குவோர் ஆவணங்களை பெற புதிய வசதி
ADDED : செப் 10, 2024 10:52 PM
சென்னை:அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் புதிதாக வீடு வாங்குவோர், கூடுதல் விபரங்கள் அறியும் வகையில் சிறப்பு வசதியை, ரியல் எஸ்டேட் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமும் மற்றும் தீர்ப்பாயமும் செயல்பட்டு வருகின்றன. ரியல் எஸ்டேட் சட்டத்தின்படி, 5,381 சதுரடி அல்லது அதற்கு மேற்பட்ட நில பரப்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமான திட்டங்களை, இந்த ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இந்த ஆணையம் துவங்கப்பட்ட போது, கட்டுமான திட்ட ஆவணங்கள், 'மேனுவல்' முறையில் பதிவு செய்யப்பட்டன. இதில், கட்டுமான நிறுவனங்கள் காகித வடிவில் கொடுக்கும் ஆவணங்களை, இணையதளத்தில் பொது மக்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பிரச்னை ஏற்பட்டது. குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டும், 'ஸ்கேன்' செய்து வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில், 'ஆன்லைன்' முறையில் கட்டுமான திட்டங்களை பதிவு செய்யும் பணிகள், நடப்பு ஆண்டில் துவங்கின. இதன் வாயிலாக, அனைத்து ஆவணங்களும் இணையதளத்தில் பதிவேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, வீடு வாங்குவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:
புதிதாக வீடு வாங்க வரும் மக்கள், அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து பெற்று ஆய்வு செய்யலாம். இதில், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால், தொழில்நுட்ப ரீதியான சில ஆவணங்கள் ஆய்வுக்கு வருவதில்லை. மக்கள் கேட்காததால், கட்டுமான நிறுவனங்களும் அமைதியாக இருந்து விடுகின்றன.
ரியல் எஸ்டேட் ஆணையம், ஒவ்வொரு கட்டுமான திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இணையதளத்தில் வெளியிடுகிறது.
கட்டுமான திட்ட அனுமதி, வரைபடம், கட்டுமான பணி உரிமம், கார்பெட் ஏரியா விபரம், மண் பரிசோதனை அறிக்கை, கட்டட அமைப்பியல் பொறியாளர் அறிக்கை, நிலம் தொடர்பான உரிமை ஆவணங்கள், வில்லங்க சான்று, கட்டட உறுதி தன்மைக்கான சான்று, வடிவமைப்பு தொடர்பான வல்லுனரின் சான்று, கட்டுமான நிறுவனத்தின் கணக்கு அறிக்கை, வங்கிக் கணக்கு விபரம், கட்டுமான ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், ரியல் எஸ்டேட் ஆணையம் வெளியிடுகிறது.
புதிதாக வீடு வாங்குவோர், ரியல் எஸ்டேட் ஆணைய இணையதளம் வாயிலாக, இந்த ஆவணங்களின் பிரதிகளை எளிதாக பெற்று ஆய்வு செய்யலாம். சில சமயங்களில் கட்டுமான நிறுவனங்கள் அளிக்கும் ஆவணங்களின் உண்மை தன்மையும், இதன் வாயிலாக உறுதி செய்யப்படுகிறது.
வீடு வாங்கும் மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும். கட்டுமான நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கவும் உதவும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.