போலி ஆவண பயன்பாட்டை தடுக்க பத்திர பதிவில் புது வசதி
போலி ஆவண பயன்பாட்டை தடுக்க பத்திர பதிவில் புது வசதி
ADDED : ஜூலை 11, 2024 11:21 PM
சென்னை:பத்திரப்பதிவின் போது போலிகளை கட்டுப்படுத்த, நில அளவை வரைபடத்தை சார் - பதிவாளர்கள் சரிபார்க்கும் புதிய வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.
போலி ஆவணங்களை பயன்படுத்தி, சிலர் மோசடி பத்திரப்பதிவில் ஈடுபடுவதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்க பதிவுத்துறையும், வருவாய் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில், 'பட்டா இல்லாத நிலத்தின் ஆவணங்களை பதிவுக்கு ஏற்கக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, சொத்து தொடர்பான கிரைய பத்திரம் பதிவுக்கு வரும்போது, அதன் பட்டா குறித்து விண்ணப்பதாரர் அளிக்கும் விபரங்களை, சார் - பதிவாளர்கள் சரிபார்க்க வேண்டும்.
இதற்காக பத்திரப்பதிவுக்கான, 'ஸ்டார் 2.0' சாப்ட்வேரில், வருவாய்த் துறையின், 'தமிழ் நிலம்' தகவல் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
இதனால், பத்திரப்பதிவு செய்யும் சார் - பதிவாளர்கள், அதில் சம்பந்தப்பட்ட நிலத்தின் பட்டா தகவல் உண்மையானது தானா என சரிபார்க்க முடியும். அதன் வாயிலாக தவறுகள் கண்டுபிடிக்கப்படும் என்பதால், போலி பட்டா பயன்படுத்துவதை தடுக்க முடிகிறது.
வருவாய்த் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பத்திரப்பதிவின் போது, நிலத்தின் பட்டா விபரங்களை சரிபார்க்கும் வசதி மேம்படுத்தப்பட உள்ளது. இதன்படி, சொத்தின் நில அளவை வரைபடத்தை, சார் - பதிவாளர்கள் பார்க்க புதிய வசதி கொண்டு வரப்படும். விரைவில், ஸ்டார் 2.0 சாப்ட்வேரில் இந்த வசதி சேர்க்கப்பட உள்ளது.
இதனால், பட்டா விபரங்களை, நில வரைபடத்துடன் ஒப்பிட்டு பார்க்க வாய்ப்பு கிடைக்கும். இது போலி ஆவண பயன்பாட்டை தடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

