ADDED : ஆக 13, 2024 02:51 AM
சென்னை: ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புதிய கட்டுமான திட்டங்கள், மனைப்பிரிவு திட்டங்களை பதிவு செய்யும் பணிக்காக புதிதாக, 'இ-சேவை பிரிவு' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் சட்டப்படி, 5,381 சதுரடி, அதற்கு மேற்பட்ட பரப்பளவு நிலத்திலான கட்டுமான திட்டங்கள், மனைப்பிரிவுகளை, இதற்கான ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம். இதன்படி, நேரடியாக பதிவு செய்து வந்தனர்.
தற்போது, இந்த பணிகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாதக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணையம் வெளி யிட்டுள்ள அறிவிப்பு:
ஆன்லைன் முறையில் கட்டுமான திட்ட விபரங்களை பதிவேற்றம் செய்வதில், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக, ஆணைய அலுவலக வளாகத்தில், 'இ - சேவை பிரிவு' புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுமான நிறுவனங்கள், தங்கள் திட்டம் குறித்த ஆவணங்களை ஸ்கேன் செய்து, சாப்ட் காப்பி வடிவில் கொண்டு வர வேண்டும். அலுவலக நேரத்தில், இந்த வசதியை கட்டுமான நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கான கட்டண விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கட்டணம் எவ்வளவு?
மனைப்பிரிவு 4.94 ஏக்கர் வரை, 6,000 ரூபாய்; அதற்கு மேல் 12,000 ரூபாய்
குடியிருப்பு பிரிவில் 20 வீடுகள் வரை, 10,000; 50 வீடுகள் வரை, 15,000; 100 வீடுகள் வரை, 20,000; அதற்கு மேல் 25,000 ரூபாய்
வணிக பிரிவில், 10,763 சதுர அடி வரை, 10,000; 53,819 சதுர அடி வரை, 15,000; 1.07 லட்சம் சதுர அடி வரை, 20,000; அதற்கு மேல் 25,000 ரூபாய்.
அதேபோல், கலப்பு பயன்பாட்டு கட்டுமான திட்டங்களுக்கு, இதே அடிப்படையில் கட்டணங்கள் பொருந்தும் என கூறப்பட்டுஉள்ளது.