தபால் ஓட்டு அனுப்ப புதிய நடைமுறை: திருச்சிக்கு நாளை கொண்டு வர உத்தரவு
தபால் ஓட்டு அனுப்ப புதிய நடைமுறை: திருச்சிக்கு நாளை கொண்டு வர உத்தரவு
ADDED : ஏப் 16, 2024 04:09 AM
தேனி : தபால் ஓட்டுகளை தொகுதி வாரியாக கொண்டு சென்று கொடுக்காமல் நேரடியாக நாளை(ஏப்.,17) திருச்சிக்கு கொண்டு வர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அங்கிருந்து தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், போலீசார், மற்ற சில துறையை சேர்ந்தவர்களுக்கு தபால் ஓட்டளிக்கும் வசதி உள்ளது. கடந்த தேர்தல் வரை அலுவலர்களுக்கு தபால் ஓட்டுக்களை பெற்று தபால் மூலம் அனுப்பினர்.
தேனி மாவட்டதை சேர்ந்த அலுவலர் சென்னையில் பணி புரிந்தால் அவருக்கான தபால் ஓட்டை தேனியில் இருந்து சென்னை நேரிடையாக கொண்டு சென்று வழங்கப்பட்டது.
இதே போல் ஒவ்வொரு தொகுதிக்கும் தபால் ஓட்டுக்களை தனித்தனி குழுக்கள் அமைத்து போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சேர்க்கப்பட்டது. இதனால் அலுவலர்களுக்கு அலைச்சல், வீண் செலவு ஏற்பட்டது.
தேர்தல் பணிபுரிவோருக்கு சிறப்பு மையம் அமைத்து தபால் ஓட்டுகள் பெறப்பட்டது. தபால் ஓட்டுகளை சம்மந்தப்பட்ட தொகுதிக்கு கொண்டு சேர்க்க குழுக்கள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தபால் ஓட்டுகளை தொகுதி வாரியாக நேரடியாக கொண்டு செல்லாமல் நாளை(ஏப்.,17) திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்திற்கு கொண்டு வர தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கு முன் பெறப்பட்ட தபால் ஓட்டுகளை தொகுதி வாரியாக பிரித்து தனி உறையில் வைத்து கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
தபால் ஓட்டுகளை அங்கிருந்து தொகுதி வாரியாக அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

