வீட்டுவசதி சங்க கணக்குகளை எளிதாக்க புதிய 'சாப்ட்வேர்'
வீட்டுவசதி சங்க கணக்குகளை எளிதாக்க புதிய 'சாப்ட்வேர்'
ADDED : பிப் 25, 2025 02:27 AM
சென்னை : கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், கடன் கணக்குகளை எளிதாக்க, புதிய, 'சாப்ட்வேர்' விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில், 670 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றின் உறுப்பினர்களிடம், கடன் நிலுவையை வசூலிக்கும் போது, அதை முறையாக வரவு வைப்பதில்லை என, சங்கங்கள் மீது புகார் கூறப்படுகிறது.
மேலும், பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களைக் கூறி, வசூல் தொகையை வரவு வைப்பதில் தவறுகள் நடக்கின்றன. இதை சரிசெய்ய வீட்டுவசதி துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, தமிழக கூட்டுறவு வீட்டுவசதி இணையம், முதன்மை கூட்டுறவு சங்கங்களின் கணக்குகளை ஒருங்கிணைக்க, புதிய, 'சாப்ட்வேர்' உருவாக்கப்பட உள்ளது.
வல்லுநர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பரிந்துரை அடிப்படையில், புதிய சாப்ட்வேர் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
அதன்பின், 'கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில், உறுப்பினர் செலுத்தும் தொகை, உடனடியாக அவரது கணக்கில் வரவு வைக்கப்படும்' என, வீட்டு வசதித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

