ADDED : மார் 22, 2024 01:07 AM
சென்னை:''தேர்தல் கமிஷனிடம், 'டிவி' சின்னம் கேட்டுள்ளோம். அதை ஒதுக்கினால், அதில் போட்டியிடுவோம். இல்லையேல், தேர்தல் கமிஷன் எந்த சின்னத்தை ஒதுக்குகிறதோ, அதில் போட்டியிடுவோம்,'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., கூட்டணியில், புதிய தமிழகத்திற்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சி துவக்கப்பட்ட நாளில் இருந்து சந்தித்த தேர்தல்களில், தனி சின்னம் பெற்று போட்டியிட்டு வந்தோம். கடந்த லோக்சபா தேர்தலில், கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட்டோம்.
நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், எங்களுக்கு டிவி சின்னம் ஒதுக்கும்படி, தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்திருந்தோம். ஏற்கனவே நாங்கள் போட்டியிட்ட டிவி சின்னத்தை கேட்டு, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். நீதிபதி எங்களுக்கு சின்னத்தை ஒதுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, டிவி சின்னத்தை ஒதுக்கும்படி, தலைமை தேர்தல் கமிஷனரிடம் எங்கள் வழக்கறிஞர் மனு அளித்து உள்ளார்.
நான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து, டிவி சின்னம் ஒதுக்க கோரினேன். அந்த சின்னம் ஒதுக்கப்படும் என நம்புகிறோம்.
பா.ஜ., கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு, கூட்டணி முடிந்ததும், சில மணி நேரத்தில் சின்னம் ஒதுக்கப்படுகிறது. அதே முறைப்படி எங்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும் என்று நம்புகிறோம். டிவி சின்னம் ஒதுக்கப்படாமல், வேறு சின்னத்தை ஒதுக்கினாலும், அதில் போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

