ADDED : ஆக 01, 2024 02:17 AM
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. வரும் 8ம் தேதி வரை பதிவு செய்யலாம். 19ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 21ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடக்கும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு, சிறப்பு பிரிவுக்கு நேரடியாக கவுன்சிலிங் நடக்கும். பொதுப் பிரிவுக்கு ஆன்லைன் முறையில் நடக்கும் என, மருத்துவ கல்வி ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.
நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் கொள்முதல் செய்து தரும் நெல், அரசு மற்றும் தனியார் அரிசி ஆலைகளில் அரிசியாக மாற்றப்படுகிறது. இதற்காக மத்திய அரசு, வாணிப கழகத்திற்கு நெல் அரவை மானியம் வழங்குகிறது. அதன்படி, அரவை மானியமாக தற்போது 936 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலையில், நீலகிரி மாவட்டம் சேரங்கோடு - 1 கிராமம், கொல்லி அட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாணகுமார், 52, பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தார்.
இதை அறிந்த முதல்வர், அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.