கீழடியை அடுத்து பொருநை அருங்காட்சியகம் மே மாதத்தில் திறப்பு
கீழடியை அடுத்து பொருநை அருங்காட்சியகம் மே மாதத்தில் திறப்பு
ADDED : பிப் 23, 2025 12:55 AM

சென்னை, பிப். 23-
கீழடிக்கு இணையாக, திருநெல்வேலியில் அமைக்கப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகத்தை, மே மாதம் திறக்க, அரசு முடிவு செய்துள்ளது.
தமிழர்களின் அடையாளங்களை உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில், தொல்லியல் துறையின் அகழாய்வு கண்டுபிடிப்புகளை, அரசு வெளியிட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில், வைகை நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இதேபோன்று, திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தில், கொற்கை, ஆதிச்சநல்லுார், சிவகளை ஆகிய இடங்களில் நடந்த தொல்லியல் அகழாய்வுகள் வாயிலாக, பல்வேறு பண்டை கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
கீழடியில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை விட, பல ஆண்டுகள் பழமையான பொருட்களும் இதில் உள்ளன. இவற்றை காட்சிப்படுத்தும் வகையில், திருநெல்வேலி, குலவணிகர்புரத்தில் பொருநை அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது.
இதற்கு முதல்வர் ஸ்டாலின், 2023 மே, 18ல் அடிக்கல் நாட்டினார். இப்பணிக்கு, 56.3 கோடி ரூபாய் பொதுப்பணி துறைக்கு வழங்கப்பட்டு உள்ளது.
75 சதவீத பணி நிறைவு
பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள், 13 ஏக்கர் பரப்பளவில், 54,000 சதுர அடியில் நடந்து வருகின்றன. இதில், ஆதிச்சநல்லுாரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன், 16,486 சதுர அடியில் இரண்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
சிவகளையில் கண்டெடுத்த பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன், இரண்டு கட்டடங்கள், 8,991 சதுர அடியிலும், கொற்கை பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில், 17,429 சதுர அடி பரப்பளவில் இரண்டு கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமின்றி, கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் பணிமனை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. தற்போது, 75 சதவீத பணிகள் முடிவு பெற்றுள்ளன.
இந்த பொருநை அருங்காட்சியகத்தை, மே மாதம் திறக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, இப்பணிகளை ஆய்வு செய்து, விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
செயற்கை குளம்
இதுகுறித்து, பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அருங்காட்சியக கட்டுமானம் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. ஒவ்வொரு கட்டடத்தில் இருந்து மற்றொரு கட்டடத்திற்கு செல்ல இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது. கட்டடங்களுக்கு மத்தியில் செயற்கை குளம் உருவாக்கி, அதன் மீது தரைப்பாலம் அமைத்து, ரம்மியமாக நடந்து செல்லவும் வசதி செய்யப்பட உள்ளது.
சுற்றுச்சுவர், வண்ண விளக்குகள், நீரூற்றுகள், திறந்தவெளி திரையரங்கு உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட உள்ளன. தொல்லியல் ஆய்வாளர்கள், மாணவர்களை மட்டுமின்றி, பொது மக்களை கவரும் வகையிலும், அருங்காட்சியகம் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.