ராமலிங்கம் கொலை குற்றவாளிகளை பிடிக்க மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள்
ராமலிங்கம் கொலை குற்றவாளிகளை பிடிக்க மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள்
ADDED : மே 30, 2024 11:38 PM
சென்னை:பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு குற்றவாளிகள் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், மயிலாடுதுறை, திருபுவனம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க., பிரமுகரான இவர், அந்த பகுதியில் ஹிந்துக்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதை கண்டித்தார். அவரை, 'புனிதப்போர்' என்ற அடிப்படையில் பயங்கரவாதிகள், 2019ல் கொடூரமாக வெட்டிக் கொன்றனர்.
இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து, எஸ்.டி.பி.ஐ., கட்சி மற்றும் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனப்படும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அத்துடன், 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த கொலைக்கு மூளையாகச் செயல்பட்ட, திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, 39, கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத், 42, வடக்கு மாங்குடியைச் சேர்ந்த புர்ஹாதீன், 33, திருவிடைமருதுாரைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது, 27, நபீல் ஹுசைன், 28, ஆகியோர் செயல்பட்டது தெரிய வந்தது.
சில தினங்களுக்கு முன், என்.ஐ.ஏ., அதிகாரிகள், குற்றவாளிகள் ஐந்து பேரின் பெயர், படம் உள்ளிட்ட விபரங்களுடன், கோவை உள்ளிட்ட இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டினர்; 'வாட்ஸாப்'பிலும் பரப்பினர்.
அவற்றில், ஐந்து குற்றவாளிகள் குறித்தும் தகவல் தெரிவித்தால், ரகசியம் காக்கப்பட்டு, 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.
இதையடுத்து, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. மயிலாடுதுறை மற்றும் திருபுவனத்தில் கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.
அவர்கள் கூறுகையில், 'குற்றவாளிகள் பதுங்கல் குறித்து நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. அவர்கள் இந்த பகுதிகளுக்கு வந்து சென்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன' என்றனர்.