சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது: அ.தி.மு.க., நிலை மாறாது என்கிறார் பழனிசாமி
சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது: அ.தி.மு.க., நிலை மாறாது என்கிறார் பழனிசாமி
UPDATED : ஜூன் 09, 2024 03:02 AM
ADDED : ஜூன் 09, 2024 01:35 AM

ஓமலுார், ஜூன் 9- ''வரும் 2026 சட்டசபை தேர்தலிலும், பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
தேசிய கட்சிகளுடன் இனி கூட்டணி அமைக்க கூடாது என, முடிவு எடுத்ததற்கு என்ன காரணம் என்பதை அவர் விளக்கினார்.
“தேசிய கட்சிகள் கூட்டணி அமைக்க நம்மை தேடி வருகின்றன. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால், தமிழகத்துக்கு நல்லது கிடைக்கும் என்று நம்பி, தேர்தல் வேலை செய்கிறோம். ஆனால், ஆட்சி அமைத்த பின் அவர்கள் நம்மை மறந்து விடுகிறார்கள்” என்றார் அவர்.
சேலம் மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நேற்று நடந்தது. அதில் பழனிசாமி பேசியதாவது:
தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி எட்டு முறை தமிழகம் வந்தார். நட்டா, அமித் ஷா, நிர்மலா என்று ஒரு படையே வந்து பிரசாரம் செய்தது. பா.ஜ., கூட்டணியில் இருந்த ராமதாஸ், அன்புமணி பிரசாரம் செய்தனர்.
தி.மு.க., கூட்டணியில் ஸ்டாலின், ராகுல், உதயநிதி, அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்தனர். ஆனால், அ.தி.மு.க.,வுக்கு நான் மட்டுமே தமிழகம் முழுதும் பிரசாரம் செய்தேன். கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,வின் பொதுச்செயலர் பிரேமலதாவும் பிரசாரம் செய்தார்.
1 சதவீதம் கூடுதல்
வெளிப்படையான பிரசாரம் இப்படி என்றால், ஊடகங்கள் வாயிலாக அ.தி.மு.க., ரொம்ப வீக் என்றும், தி.மு.க., கூட்டணியே பலம் மிகுந்தது என்றும், தொடர்ந்து ஒரு பிம்பத்தை உருவாக்கினர். விவாதம் என்ற பெயரில் நம் மீது அவதுாறு அள்ளி வீசினர். இல்லாதது பொல்லாதது கூறி, திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்தினர்.
இவ்வளவுக்கும் மத்தியில் 2019 தேர்தலை விட, இம்முறை ஒரு சதவீதம் கூடுதலாக ஓட்டு வாங்கியிருக்கிறோம். மத்திய, மாநில ஆட்சியாளர்களும் ஊடகங்களும் நமக்கு எதிராக செயல்பட்டும், நமக்கான ஓட்டுகளை நாம் இழக்கவில்லை என்பதால், இதை ஒரு வெற்றியாகவே கருதுகிறேன்.
சீட்டு கிடைக்காமல் போயிருக்கலாம், ஓட்டுகள் நம்மை விட்டு போகவில்லை.
ஆனால், கடந்த 2014 தேர்தலில் 18.80 சதவீத ஓட்டுகள் பெற்ற பா.ஜ., கூட்டணி, இந்த தேர்தலில் 18.28 சதவீதம்தான் பெற்றுள்ளது. 0.62 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், ஊடகங்கள் அந்த அணிக்கு அதிக ஓட்டுகள் கிடைத்ததாக கதை சொல்கின்றன.
தி.மு.க., நிலையும் அதுதான். கடந்த லோக்சபா தேர்தலில் அந்த கட்சி 33.52 சதவீத ஓட்டுகள் பெற்றது. இந்த தேர்தலில் 26.93 சதவீதமாக சரிந்துள்ளது. அதாவது 6.51 சதவீதம் சரிவு. கூட்டணியாக பார்த்தாலும் 2019ல் தி.மு.க., கூட்டணி 53.29 சதவீத ஓட்டுகள் பெற்றது. தற்போது அது 46.97 சதவீதமாக குறைந்திருக்கிறது. இந்த கணக்கை மக்களுக்கு ஊடகங்கள் சொல்வது இல்லை.
நமக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிட்டவில்லை; சில தொகுதிகளில் டிபாசிட் இழந்துள்ளோம். அதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், ஓட்டு குறையவில்லை, கூடியிருக்கிறது. அரசியலில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வருவது சகஜம். எல்லா கட்சிக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. விழுந்த கட்சிகள் எழுந்து வந்துள்ளன. எனவே, ஒரு தேர்தலின் முடிவை காட்டி நமக்கு பின்னடைவு என்பது, திட்டமிட்டு பரப்பும் செய்தி.
பா.ஜ.,வுடன் இணைந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என பத்திரிகையில் போட்டிருந்தார்கள். அதை சுட்டிக்காட்டி வேலுமணி பேசியுள்ளார். தன் கருத்தாக சொல்லவில்லை. பிரிந்து போனவர்களை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் பிரிந்து சென்றதால் தான், ஒரு சதவீதம் ஓட்டுகள் அதிகமாக கிடைத்துள்ளது.
எந்த தேர்தலில் எப்படி ஓட்டளிக்க வேண்டும் என, தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். லோக்சபாவுக்கும் சட்டசபைக்கும் ஒரே மாதிரியாக அவர்கள் ஓட்டு போடுவது இல்லை.
ஆகவே, சட்டசபை தேர்தல் முடிவு வேறு மாதிரிதான் இருக்கும். 10 ஆண்டுக்கு முன்னால் கோவையில் பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணன் பெற்ற ஓட்டுகளை காட்டிலும், அண்ணாமலை இப்போது குறைவாகவே பெற்றுள்ளார். கனவு பலிக்காத கவலையில் அவர் ஏதேதோ பேசுகிறார். பொருட்படுத்த வேண்டாம்.
கூட்டணி கிடையாது
மத்தியில் தனிக்கட்சி ஆட்சி போய் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை வந்துள்ளது. இதை, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என பா.ஜ., ஏற்றுக்கொள்ள வேண்டும். பல மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. அங்கேயும் அந்த கட்சிக்கு அண்ணாமலை போன்ற தலைவர்கள் இருக்கலாம். அதனால், இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். எங்களை பொருத்தவரை 2026 சட்டசபை தேர்தலிலும், பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது.
இவ்வாறு கூறினார்.

