ADDED : செப் 11, 2024 02:00 AM
சென்னை:கடந்த 1995ல் நாகூரில், இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்ட தங்கம்மாளின் 29வது நினைவு நாள், ஜூலை 7ல் அனுஷ்டிக்கப்பட்டது.
அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் பங்கேற்றார். மதமோதலை துாண்டும் வகையில் பேசியதாக அஸ்வத்தாமன் மீது நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார் அஸ்வத்தாமன். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி, நிபந்தனையுடன் ஜாமின் வழங்கினார். நாகூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும்; இனி இதுபோல் பேச மாட்டேன் என மன்னிப்பு பிரமாண பாத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தார். இதை ஏற்க மறுத்த அஸ்வத்தாமன், 'வழக்கு விசாரணை நடத்தப்படாமலேயே மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது தண்டனையை ஒப்புக்கொள்வது போல ஆகிவிடும். இது ஏற்புடையதல்ல. அதனால், உத்தரவை மாற்ற வேண்டும்' எனக் கேட்டு, நீதிபதி தமிழ்ச்செல்வியிடம் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, 'விசாரணை நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யத் தேவையில்லை' என உத்தரவிட்டார்.

