எந்த ஜாதியும் கோவில்களுக்கு சொந்தம் கொண்டாட முடியாது: ஐகோர்ட் அதிரடி
எந்த ஜாதியும் கோவில்களுக்கு சொந்தம் கொண்டாட முடியாது: ஐகோர்ட் அதிரடி
ADDED : மார் 05, 2025 05:13 AM

சென்னை : 'எந்த ஜாதியும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது; ஜாதி அடிப்படையில் கோவில்களை நிர்வகிப்பது மத நடைமுறை அல்ல' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், மாரியம்மன், அங்காளம்மன், பெருமாள் மற்றும் பொன் காளியம்மன் போன்ற கோவில்கள் உள்ளன.
ஒரே நிர்வாகத்தின் கீழ், இக்கோவில்கள் இயங்கி வருகின்றன.
பொன் காளியம்மன் கோவிலை மட்டும் தனியாக பிரிக்க வேண்டும் என, கடந்தாண்டு ஜனவரி, 5 மற்றும் கடந்த ஜனவரி, 31 ஆகிய தேதிகளில், கோவிலை நிர்வகிக்கும் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள், நாமக்கல் ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் மனு அளித்தனர்.
இந்த கோரிக்கை மனுவை, ஹிந்து அறநிலையத் துறை ஆணையர் பரிசீலிக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
பொதுவானது
பொன் காளியம்மன் கோவிலை, தங்கள் ஜாதியை சேர்ந்தவர்கள் நிர்வகிக்கின்றனர்; மற்ற கோவில்களை வேறு ஜாதியினர் நிர்வகித்து வருகின்றனர்.
எனவே, மற்ற கோவில்களில் இருந்து பொன் காளியம்மன் கோவிலை தனியாக பிரிக்க வேண்டும் என்று, அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.எஸ்.விஜயராகவன், அறநிலையத் துறை சார்பில் கூடுதல் அரசு பிளீடர் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் ஆஜராகினர். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானது. அனைத்து பக்தர்களும், கோவிலை நிர்வகிக்கலாம்; வழிபடலாம். ஜாதியின் பெயரால், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு சமூகக்குழு கூட, ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையை கொண்டிருக்கலாம்.
மேலும், அந்த வழிபாட்டு முறை தொடர்பான அவர்களின் வழக்கமான உரிமைகளை பெறவும் உரிமை உண்டு.
ஜாதி என்பது மத பிரிவு அல்ல. ஜாதி பாகுபாட்டை நம்புபவர்கள், மத பிரிவு என்ற போர்வையில், தங்கள் வெறுப்பையும், சமத்துவமின்மையையும் மறைக்க முயற்சிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, பிளவுப்படுத்தும் உள்ளுணர்வுகளை வளர்க்கவும், சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்கவும், கோவில்களை மைதானம் ஆகவும் பயன்படுத்துகின்றனர்.
பெரும்பாலான பொது கோவில்கள், குறிப்பிட்ட ஜாதியினரின் கோவில்கள் என்ற முத்திரை குத்தப்பட்டு உள்ளன.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு, 25 மற்றும் 26 ஆகியவை, மத நடைமுறை, மத பிரிவுகளின் உரிமைகளை மட்டுமே பாதுகாக்கின்றன. அவ்வாறு இருக்கும்போது, எந்த ஜாதியினரும் ஒரு கோவிலுக்கு உரிமை கோர முடியாது.
ஏற்க முடியாது
'ஜாதி அடையாளத்தின் அடிப்படையில், கோவிலை நிர்வகிப்பது என்பது மத நடைமுறையும் அல்ல. ஜாதி என்பது ஒரு போதும், ஒரு மதப்பிரிவாக இருக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
'ஜாதியற்ற சமூகம் என்பது அரசியலமைப்பின் குறிக்கோள்; ஜாதி நிலைநிறுத்தும் எதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாது' என, வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது.
எனவே, ஜாதியை நிலைநிறுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
'சாதிகள் இல்லையடி பாப்பா...- குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்ற பாரதியாரின் வரிகளை, தன் உத்தரவின் துவக்கத்தில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.