தரவுகள் எதுவும் அழியவில்லை ஆவணங்கள் தான் மாயம்: அதிகாரிகள் விளக்கம்
தரவுகள் எதுவும் அழியவில்லை ஆவணங்கள் தான் மாயம்: அதிகாரிகள் விளக்கம்
ADDED : மே 25, 2024 01:55 AM
சென்னை:தொழிலாளர் நலத்துறையின் கீழ், 18 நல வாரியங்கள் உள்ளன.
இவற்றில் இணையவழியில் பதிவு செய்திருந்த, 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் மற்றும் ஆவணங்கள் அழிந்து விட்டதாகவும், அவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன், சில தினங்களுக்கு முன் வலியுறுத்தி இருந்தார்.
இதுகுறித்து, துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
தொழிலாளர்களின் பதிவுகள் எதுவும் அழியவில்லை. அவர்கள் வாரியத்தில் உறுப்பினரான போது சமர்ப்பித்திருந்த, அடையாள ஆவணங்கள் தான் அழிந்து விட்டன.
கடந்த ஆண்டு இறுதியில், ஆவணங்கள் அழிந்த விபரம் தெரிந்ததும், உறுப்பினர்கள் பதிவு அடிப்படையில், துறை சார்பில் மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அழிந்த ஆவணங்கள் திரும்ப பெறப்பட்டன.
உறுப்பினர்கள் பதிவு அடிப்படையில், அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதில், எந்த பாதிப்பும் இல்லை.
இனி ஆவணங்கள் அழியாமல் பாதுகாக்கவும், இணையதளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

