உணவு இல்லை; சம்பளம் தரவில்லை! ஓட்டு சாவடி அலுவலர்கள் சாலை மறியல்
உணவு இல்லை; சம்பளம் தரவில்லை! ஓட்டு சாவடி அலுவலர்கள் சாலை மறியல்
ADDED : ஏப் 19, 2024 09:04 PM

தேர்தல் பணியின் போது உணவு வழங்கவில்லை என்றும், பணி முடிந்த பின் சம்பளமும் தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தும், பல்லடம் சட்டசபை தொகுதியில் தேர்தல் பணியாற்றிய ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பல்லடம்- மங்கலம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: கடந்த மூன்று நாட்களாக நேரம் காலம் பார்க்காமல் குடும்பத்தை விட்டு இங்கு வேலை பார்த்து வருகிறோம். பணிபுரியும் ஒவ்வொருவரும் கோவை, ஈரோடு என பல்வேறு பகுதிகளில் இருந்து சிரமப்பட்டு வருகிறோம். தேர்தல் பணியின் போது உணவு வழங்க கூட ஆளில்லை. எங்கள் சொந்த செலவில் வெளியே சாப்பிட செல்ல முயன்றாலும் விட மறுத்தனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். இது போதாதென்று, இரவு 7 மணி ஆகியும் வேலை பார்த்ததற்கான சம்பளத்தையும் இன்னும் வழங்கவில்லை. வேலை வாங்கும் போது இது தெரியாதா அது தெரியாதா? என குறை கூறி அதிகாரிகள் வேலை வாங்கினர். ஆனால் , நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்த்த நாங்கள் சாப்பிட்டோமா? இல்லையா என்று கூட யாரும் பார்க்கவில்லை. இவ்வாறு தேர்தல் பணியாலும், அதிகாரிகளின் செயல்பாடு காரணமாகவும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் என்றனர்.
இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஓட்டுச் சாவடி அலுவலர்கள் பல்லடம் -மங்கலம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் கழித்து வந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவா, ஓட்டுச் சாவடி அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே, சர்க்கரை அதிகமாகி, பெண் ஒருவர் மயக்கமடைந்து விழுந்தார். அவருக்கு உடன் இருந்தவர்கள் உதவினர். இதையடுத்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அனைவருக்கும் உடனடியாக பண பட்டுவாடா நடந்தது.

