ADDED : செப் 14, 2024 12:39 AM
சென்னை:கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், நகை கடன் வழங்கப்படுகிறது. அதாவது தங்கம் மதிப்பில், 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படும். அசல், வட்டி செலுத்த தாமதம் ஏற்பட்டாலும், நகைகள் உடனே ஏலம் விடப்படுவதில்லை.
இதனால், கூட்டுறவு நிறுவனங்களில் பலரும் நகை கடன் வாங்குகின்றனர். மாநிலம் முழுதும், 115 கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்ளன. அவை ரேஷன் கடைகளை நடத்துவதுடன், வேளாண் இடுபொருட்களையும் விவசாயிகளுக்கு வழங்குகின்றன. சில சங்கங்கள் மட்டுமே நகை கடன் வழங்குகின்றன.
இந்நிலையில், அனைத்து சங்கங்களின் வருவாயையும் உயர்த்த, நகை கடன் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு, கூட்டுறவு துறை உத்தரவிட்டு உள்ளது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், வேளாண் விற்பனை சங்கங்கள் கடன் பெற்று, அதன் மேல் கூடுதல் வட்டி நிர்ணயம் செய்து, வாடிக்கையாளர்களுக்கு நகை கடன் வழங்க உள்ளன.