பதவியும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: புலம்பும் புள்ளியியல் துறை அலுவலர்கள்
பதவியும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: புலம்பும் புள்ளியியல் துறை அலுவலர்கள்
ADDED : ஆக 22, 2024 04:45 AM

மதுரை : பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையில், மூன்று ஆண்டுகளாக எந்த பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. பதவி உயர்வு பெறுவதற்கான, 20 பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, 52 கண்காணிப்பாளர்களை நீக்க முயற்சி நடந்து வருவதாக புள்ளியியல் துறை அலுவலர்கள் புலம்புகின்றனர்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கீழ் உள்ள இத்துறையில், நிர்வாக குளறுபடி காரணமாக, காலி பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. 30 உதவி இயக்குநர்கள், 13 துணை இயக்குநர்கள், 3 இணை இயக்குநர்கள், ஒரு கூடுதல் இயக்குநர் பணியிடங்கள் ஓராண்டாக காலியாக உள்ளன.
இப்பணியிடங்களுக்கு சர்வீஸ் அடிப்படையில், பதவி உயர்வு அளிக்கப்பட்டு நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தலைமை அலுவலகத்தில் உள்ள சிலர், தங்கள் செல்வாக்கு, அரசியல் பின்புலத்தால் முட்டுக்கட்டை போட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊழியர்கள் கூறியதாவது:
வாரிசு அடிப்படையில் பணியில் சேர்ந்த சிலர், ஜாதி ரீதியாக தலைமை அலுவலகத்தில், மற்றவர்களை இயக்கி வருகின்றனர். முறையாக அரசு தேர்வு எழுதி பதவிக்கு வந்தவர்களுக்கு, கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வாரிசு வேலையில் சேர்ந்த சிலர், எந்த தகுதியும் இல்லாமல் பதவி உயர்வு பெற முயற்சித்தனர். அதை, அரசு நிராகரித்து விட்டது. அந்த ஆத்திரத்தில், 20 உதவி இயக்குநர்களின் பணியிடங்களை இல்லாமலேயே செய்து விட்டனர்.
பதவி உயர்வையும், ரத்தான பணியிடங்களையும் மீண்டும் கொண்டு வர அரசு முயற்சிக்கக் கூடாது என்பதற்காக, சிலரை துாண்டி விட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர செய்தனர். இதனால், மூன்று ஆண்டுகளாக, எந்த பதவி உயர்வும் கிடைக்கவில்லை. ரத்தான பணியிடங்களால் கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது.
தற்போது கண்காணிப்பாளர் பதவியை குறி வைத்துள்ளனர். அதற்கும் அவர்களுக்கு கல்வித் தகுதி இல்லை. இதனால், நிர்வாக வசதிக்காக என்று கூறி, 52 கண்காணிப்பாளர் பதவியை நீக்க வாய்ப்புள்ளது.
இதெல்லாம் துறை அமைச்சர், செயலர் கவனத்திற்கு சென்றதாக தெரியவில்லை. பதவி உயர்வு பெறாமலேயே பணி ஓய்வு பெற்றுவிடுவோமோ என, மன அழுத்தத்தில் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.