ADDED : செப் 12, 2024 01:07 AM
சென்னை:'அ.ம.மு.க., தலைமை அலுவலகத்தை, வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளோம். தற்போதுள்ள அலுவலகக் கட்டடத்தை, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் காலி செய்து தருவதாக, உரிமையாளரிடம் தெரிவித்துள்ளோம். வாடகை பாக்கி எதுவும் இல்லை' என, அக்கட்சி பொருளாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தினமலர் நாளிதழ் சென்னை பதிப்பில், 'தினகரன் வாடகை தராததால் கோபம்; அ.ம.மு.க., ஆபிசை காலி செய்ய நெருக்கடி' என, நேற்று செய்தி வெளியானது. இது முற்றிலும்தவறானது. கடந்த 2020 மார்ச் 12ல், அ.ம.மு.க., தலைமை அலுவலகம், நாகேஸ்வரன் என்பவர் கட்டடத்தில் செயல்பட, ஐந்து ஆண்டுகளுக்கு வாடகை ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம், 2025 மார்ச் 11ல் முடிய உள்ளது.
கட்டட உரிமையாளர் நாகேஸ்வரன், அ.ம.மு.க., அலுவலகம் செயல்படும் கட்டடம், தங்கள் கல்லுாரி பயன்பாட்டிற்கு தேவைப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், அந்த கட்டட அனுமதியில், சில சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதை அறிந்ததால், நாங்களே முன்வந்து கட்சி அலுவலகத்தை, வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள முடிவெடுத்தோம்.
எனவே, ஒப்பந்தம் முடியும் காலமான, 2025 மார்ச் மாதத்திற்குள், கட்டடத்தை காலி செய்து தருவதாக, கட்டட உரிமையாளரிடம் தெரிவித்துள்ளோம்.
தற்போது வாடகைக்கு உள்ள கட்டடத்திற்கு, வாடகை மற்றும் மின்கட்டண பாக்கி எதுவும் இல்லை. இதற்கு முன், சென்னை அசோக் நகரில் வாடகைக்கு இருந்த கட்டடத்திற்கும், எந்த வாடகை பாக்கியும் வைக்கவில்லை.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

