ADDED : மே 16, 2024 12:32 AM
சென்னை: 'பான் கார்டு எண் சமர்ப்பிக்கவும், வருமான வரி பிடித்தம் செய்யும் முறையை தேர்வு செய்யவும், ஓய்வூதியர்களுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை' என, கருவூல கணக்கு ஆணையர் விஜயேந்திர பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழகம் முழுதும், 7 லட்சம் ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள ஓய்வூதிய அலுவலகம் மற்றும், 37 மாவட்ட கருவூலங்கள் வழியாக, தங்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை பெற்று வருகின்றனர்.
தங்களின் மாதாந்திர ஓய்வூதியத்தில் இருந்து, புதிய நடைமுறைப்படி வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டுமா அல்லது பழைய நடைமுறைப்படி பிடித்தம் செய்ய வேண்டுமா என்ற விபரத்தையும், தங்களின் பான் கார்டு எண்ணையும், சம்பந்தப்பட்ட கருவூலத்தில், 15ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, கருவூலத்துறை மாவட்ட அலுவலர்கள், 'கெடு' விதித்து உத்தரவிட்ட செய்திகள் வெளியாகின.
தற்போது, அதுபோன்ற எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை என, கருவூல கணக்கு ஆணையர் விஜயேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளார்.